Published : 28 Feb 2022 08:54 PM
Last Updated : 28 Feb 2022 08:54 PM

மாநிலங்களுக்கு அதிக அதிகாரமளிக்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்: ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: "மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்தியக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்” என்று தனது நூல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னையில் நடந்த இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: "திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவில் பேசும்போது ஒரு கருத்தை நான் குறிப்பிட்டுச் சொன்னேன். 'தலைவர் கருணாநிதியைப் போல எனக்கு எழுதத் தெரியாது. அவரைப் போல பேசத் தெரியாது. ஆனால் அனைத்தையும் முயன்று பார்ப்பேன்" என்று நான் அப்போது குறிப்பிட்டேன்.அப்படி நான் செய்த முயற்சிதான் இந்தப் புத்தகம். திமுக தலைவர் என்ற பெருமையால் அல்ல , இந்தத் தமிழகத்தின் முதல்வர் என்ற கர்வத்தால் அல்ல, எப்போதும், என்றென்றும், எந்தச் சூழலிலும், எந்தப் பொறுப்பில் இருந்தாலும், உங்களில் ஒருவன்தான் நான் என்பதை எந்த நாளும் இந்த ஸ்டாலின் மறக்க மாட்டான் என்பதன் அடையாளமாகத்தான் எனது வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 'உங்களில் ஒருவன்' என்றே பெயர் சூட்டி இருக்கிறேன். எனது இருபத்து மூன்று வயது வரையிலான வாழ்க்கைதான் இந்தப் புத்தகம்.

'திராவிடவியல் ஆட்சிமுறை' தான் எனது கோட்பாடு. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்னுடைய கோட்பாட்டு நெறிமுறை ஆகும். கல்வியில் , வேலைவாய்ப்பில், தொழில் வளர்ச்சியில் - சமூக மேம்பாட்டில், இந்த நாடு ஒரு சேர வளர வேண்டும். அந்த வளர்ச்சி என்பது அனைத்து சமூகங்களையும் மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தின் வளர்ச்சியாக இல்லாமல், அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும். வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பால் பேதமற்ற, ரத்தபேதமற்ற சமூகமாக நமது சமூக மனோபாவம் மாற வேண்டும். 'எல்லார்க்கும் எல்லாம்' என்பதே இந்த திராவிடவியல் கோட்பாடு ஆகும். அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். அதைத்தான் அரசியல் அமைப்புச் சட்டமும் சொல்கிறது. அனைத்து மாநிலங்களும் அதிக அதிகாரம் கொண்ட சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு.இந்த திராவிடவியல் கோட்பாட்டை, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ராகுல்காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வீ ஆகியோர் இங்கே அழைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் எழுந்து நின்று ராகுல்காந்தி, “India is a union of states” என்றும்; “BJP can never ever rule over the people of Tamil Nadu” என்றும் பேசியது, அவர் திராவிடவியல் கோட்பாட்டை முழுமையாக அவர் உள்வாங்கியவர் என்பதை உணர்த்துகிறது. இத்தகைய மனமாற்றத்தை அகில இந்தியத் தலைவர்கள் அடைய வேண்டும் என்றுதான் அண்ணாவும், கருணாநிதியும் விரும்பினார்கள். அவர்கள் காலத்தில் அடைய முடியாத மாற்றம் இப்போது தெரியத் தொடங்கி இருக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்தின் நெறிமுறைகள் குறித்து ராகுல் காந்தி அதிகம் பேசத் தொடங்கி இருப்பதற்கு நான் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்தியக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ,அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு, சிந்தனை உரிமைகள் பறிக்கப்பட்டு, செயல்படும் உரிமைகள் பறிக்கப்பட்டு, இன்றைய தினம் மாநிலங்கள் அதிகாரமற்ற பகுதிகளாக உருக்குலைக்கப்படுவதை தடுத்தாக வேண்டும். அதற்கு இந்தியா முழுமைக்குமான அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டாக வேண்டும்.

மாநிலங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிபோவதன் காரணமாக அந்த மாநில மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் பறிக்கப்படுகிறது. அதனை அனைத்துக் கட்சிகளும் உணர்ந்துள்ளன. 'மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்பது இந்தியா முழுமைக்குமான முழக்கமாக மாறிவிட்டது. அதைத்தான் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எதிரொலித்தார்.

அதேபோல், இது சட்டத்தின் ஆட்சியாக மட்டுமில்லாமல் , சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அகில இந்திய அளவிலான சமூகநீதிக் கூட்டமைப்பை திமுக சார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்தியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இத்தகைய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன் என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக உறுதி அளிக்கிறேன். அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது" என்றார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட, அதனை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை ஏற்க, பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி வரவேற்புரை ஆற்றினார்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x