Published : 28 Feb 2022 07:58 PM
Last Updated : 28 Feb 2022 07:58 PM

”என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது” - ஸ்டாலின் நூல் வெளியிட்டு விழாவில் ராகுல் காந்தி பேச்சு

சென்னை: ”தமிழகம் குறித்து பிரதமர் மோடி சரியாக புரிந்துகொள்ளவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் குறித்தும் இதுபோலத்தான் அவர் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்” என்று முதல்வர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறினார். மேலும், ”என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது” என்று அவர் உணர்ச்சிபட பேசினார்.

இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நூலை வெளியிட்ட, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, "அண்ணன் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன், இந்தப் புத்தகத்தை எழுதியதற்காக. அவருடைய வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம். பல ஆண்டுகள் அந்தப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டதோடு, தமிழக மக்களுக்கு ஏராளமான நன்மைகள் செய்து வருவதற்காக, நான் அவரை, பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

நேற்று எனது அம்மா என்னை அழைத்து நாளை மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் என்று கூறினார். நான், எனக்கு தெரியும் எனக்கூறி விட்டு, அவருக்கு எத்தனை வயது என்று தெரியுமா என கேட்டேன். அதற்கு அவர் தெரியாது என்று கூறினார். அவருக்கு வயது 69 என்றேன், உடனே எனது தாயார், ’சாத்தியமே இல்லை’ என்று கூறினார். அவருக்கு எத்தனை வயதிருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள் என நான் கேட்டேன். அதற்கு அவர், ’50 அல்லது 60 அதற்குள்ளாகத்தான் இருக்கும்’ என்று கூறினார். நான் அப்படி கூறியவுடன் எனது தாயார், கூகுளில் அந்தத் தகவலை ஒப்பிட்டுப் பார்த்து, ’நான் சொன்னது சரிதான்’ என ஒத்துக்கொண்டார். இந்தப் புத்தகத்தில் அது இருக்கிறதா, இல்லையா என தெரியாது. அவர் இன்னொரு புத்தகம் எழுத வேண்டும், அவர் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் என்பது குறித்து.

முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு தந்தமைக்காக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டுக்கு வரக்கூடியது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று. இதை நான் மேலோட்டமாகச் சொல்லவில்லை. எனது அடிமனதின் ஆழத்திலிருந்து இதை நான் குறிப்பிடுகிறேன்.

சில நாட்களுக்கு முன்னால், நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை தமிழகம் மிகப் பெரிய அளவில் பாராட்டியதை நான் அறிவேன். நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்தபோது, பத்திரிகையாளர்களைப் பார்த்தேன். அதில் ஒருவர், ’உங்களுடைய உரையில் என்ன காரணத்திற்காக தமிழ்நாடு குறித்து குறிப்பிட்டீர்கள்?’ என கேட்டார். அப்போதுதான் நானும் கவனித்தேன், தமிழ்நாடு குறித்து நான் பலமுறை குறிப்பிட்டதை. மேலும் நான் வெளியே வந்தபோது, என்னை அறியாமல் சொன்னேன், ’நான் தமிழன்’ என்று. பின்னர், நான் எனது காரில் ஏறியதற்கு பின்னால், ஏன் அப்படி நான் கூறினேன் என்று யோசித்தேன்.

ஏன் அந்த வார்த்தைகள் என்னுடைய வாயில் இருந்து வந்தன. நான் தமிழகத்தில் பிறக்கவில்லை. நான் தமிழ்மொழி பேசுவது இல்லை. 3000 ஆண்டுகள் பழமையான நாகரிகம் கொண்டது தமிழ் மொழி. அந்த நாகரிகம் குறித்து நான் இன்னும் தெரிந்துகொள்ளக்கூட முற்படவில்லை. அப்படியிருக்கும்போது, நான் தமிழன் என்று எப்படி கூறினேன் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். நான் தமிழன் என்று கூறும் உரிமையை எப்படி எடுத்துக்கொண்டேன். வீட்டுக்குச் செல்லும் வழிதோறும் நான் இதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஏன் அப்படி நான் கூறினேன் என்பது குறித்து நான் உணர்ந்தேன். ஏனென்றால், என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது. என் தந்தையை இழந்தது, எனக்கு மிகப்பெரிய வேதனையான, சோகமான அனுபவம்தான். மிகக் கடினமான அனுபவம், அந்த சோகமான அனுபவத்தை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்கிறேன். அப்போது நான் உணர்ந்தேன், என்னைத் தமிழன் என்று கூறிக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் எனக்கு இருக்கிறது என்று.

தமிழனாக இருப்பதனுடைய பொருள் என்ன? நான் முதலில் இந்தத் தமிழகத்துக்கு வரும்போது, பணிவான குணத்துடன் இங்கு வருகிறேன். தமிழகத்தின் வரலாறு, பாரம்பரியம், மொழிக்கு தலைவணங்குபவனாக நான் இங்கு வருகிறேன். உங்களது அனைத்து பரிமாணங்களையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வுடன்தான் நான் எல்லா முறையும் இங்கு வருகிறேன்.

நான் எனது நாடாளுமன்ற உரையில் பேசுகின்றபோது, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என குறிப்பிட்டேன். நாம் மாநிலங்கள் என்று கூறுகிறோம் என்றால், அந்த சொல் எங்கிருந்து வந்தது. மாநிலம் என்றால் என்ன? மண்ணைப் பற்றியது, மக்களைப் பற்றியது, மக்களின் குரலைப் பற்றியது. அந்தக் குரலிலிருந்து மொழி வெளிவருகிறது. மொழியிலிருந்து கலாச்சாரம் வருகிறது. கலாச்சாரத்தில் இருந்து வரலாறு வருகிறது. இந்த வரலாற்றில் இருந்து மாநிலம் உருவாகிறது. நான் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் எனக் கூறும் போதும், மாநிலங்களில் இருந்துதான் இந்தியா என்பதே வருகிறது என்று அழுத்தமாகச் சொன்னேன்.

எழுத்துகள் சேர்ந்து சொல்லாக மாறுகிறது. வார்த்தைகள் சேர்ந்து வாக்கியமாக மாறுகிறது. வாக்கியங்கள் சேர்ந்து கவிதையாக மாறுகிறது. எழுத்துகளை மதிக்கவில்லை என்றால், சொல்லை மதிக்கவில்லை என்றால், வாக்கியங்களை மதிக்கவில்லை என்றால், கவிதையை மதிக்கவில்லை என்றால், நீங்கள் எதையும் மதிக்க முடியாது.

பிரதமர் தமிழகம் வரும்போது எல்லாம், பொருள் புரியாமல் தமிழகம் குறித்து பேசுகிறார். தமிழ்நாடு 3000 ஆண்டு பழமையான பாரம்பரியம் மிக்க நாடு. பிரதமர் சொற்களை புரிந்து கொள்வதில்லை. வாக்கியங்களை புரிந்து கொள்வதில்லை. மொழியை புரிந்துகொள்வதில்லை. ஆனால், எந்த அடிப்படையில் அவர் தமிழ்நாடு குறித்து பேசுகிறார். தமிழக மக்களின் குரலை புரிந்துகொள்ளாமல் நான் உங்களுக்காக பேசுகிறேன் என்று அவர் எப்படி கூறுகிறார். தமிழக மக்கள் நீட் தேர்வு குறித்து மீண்டும் மீண்டும் கேட்கின்ற போது, அதற்கு பதிலளிக்காமல், நீங்கள் நடந்து கொள்வது என்ன மாதிரியான மாியாதை?

தமிழக மக்கள் ஜிஎஸ்டி நியாயமற்றது, அதனால் தங்களுக்கு பதாகமாக உள்ளது எனக் கூறுவதை புரிந்து கொள்ளாமல், நீங்கள் அவர்களை அவமதிக்கிறீர்கள். நான் நாடாளுமன்றத்தில் பேசுகின்றபோது கூறினேன், ’நீங்கள் தமிழகத்தின் வரலாற்றையும் தெரிந்துகொள்ளவில்லை. இந்த நாட்டின் வரலாற்றையும் தெரிந்துகொள்ளவில்லை’ என்று. கடந்த 3000 ஆண்டுகளாக தொடர்ந்து இன்றுவரை, தமிழகத்தில் யாராலும் எதையும் திணிக்க முடிந்தது இல்லை. ஆனால், எனக்கு தமிழக மக்கள் பற்றிய அனுபவம் இருக்கிறது. தமிழக மக்களுடன் அன்பாகவும், கணிவாகவும் பேசினால், அவர்களிடம் இருந்து நீங்கள் எதையும் பெறலாம்.

எனவே நீங்கள் இங்கு வாருங்கள், இங்கு வந்து அவர்களுடைய பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை, மொழியை பற்றி புரிந்துகொள்ளுங்கள். அவர்கள் அன்பையும், பரிவையும் வாரி வழங்குவார்கள். தமிழகம் குறித்து பிரதமர் சரியாக புரிந்துகொள்ளவில்லை. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் குறித்தும் இதுபோலத்தான் அவர் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்.

எனது நண்பர் உமர் அப்துல்லா இன்று மிக அருமையாகப் பேசினார். மிக முக்கியமாக எதை கூற வேண்டுமோ, அதை அவர் இன்று கூறினார். நானும் அதை திரும்ப கூற விரும்புகிறேன். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து தற்போது வரை இப்போதுதான் முதல் முறையாக, ஒரு மாநிலத்தின் இடமிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. இதற்குமுன் எப்போதும் அப்படி நடந்தது இல்லை.

அந்த மாநில மக்களின் உரிமைகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் தங்களை தாங்களே ஆளமுடியாத ஒரு சூழல் இருக்கிறது. குஜராத், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தற்போது ஜம்மு காஷ்மீரை ஆண்டு கொண்டுள்ளனர். இது அந்த மாநிலத்திற்கு இழைக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய அநீதி. பஞ்சாப் மாநிலத்தில் இருக்கின்ற நூற்றுக்கணக்கான மைல்கள் அளவிலான இடத்தை எடுத்து, எல்லை பாதுகாப்பு படைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மக்கள் உள்ளிட்ட யாரிடமும் இதுகுறித்து எதுவும் கலந்து பேசவில்லை. அதையேதான் தமிழகத்துக்கும் அவர்கள் செய்கிறார்கள்.

நாம் எப்போதும் வேற்றுமையில் ஒற்றுமை குறித்து பேசுகிறோம். இந்தியா பல்வேறு மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. வரலாற்று ரீதியாக இந்தியாவுக்கு இந்த வேற்றுமைகளின் காரணமாக பல அனுகூலங்கள் கிடைத்துள்ளன. இதுவே இந்தியாவின் பலம். இதுகுறித்து தமிழக மக்களிடம் இருந்து தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திடம் இருந்து ஒவ்வொரு மாநிலமும் கற்றுக்கொள்கிறது. ஒவ்வொரும் ஒவ்வொருவரை மதிக்கிறோம். எங்கள் அனைவரது தொலைநோக்கும் வேற்றுமையில் ஒற்றுமை.

நீங்கள் யார் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்க? இந்திய மக்கள் ஏன், இந்தியா எப்படியிருக்க வேண்டும் என தீர்மானிக்கக்கூடாது. உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது. இதுதான் இந்தியாவின் மைய பிரச்சினை. மக்களின் குரல் எதிரொலிக்க வேண்டும். ஆனால், திட்டமிட்டு மக்களின் உரிமைகளும், குரல்களும் நசுக்கப்படுகிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம், ஊடகம் என அனைத்தும் திட்டமிட்டு நசுக்கப்படுகிறது. பாஜக எந்த கற்பனையான உலகத்திலும் வாழ வேண்டாம். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது எங்களுக்கு தெரியும். நிச்சயமாக அவர்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். அவர்கள் வரலாற்றை எதிர்த்தும், பாரம்பரியத்தை எதிர்த்து போரிடுகின்றனர். அது அவர்களால் முடியாது, தோற்றுக் கொண்டேதான் இருப்பார்கள்" என்றார் ராகுல் காந்தி.

இந்த விழாவில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர்அப்துல்லா பேசும்போது, "தனது 13 வயதில் இருந்தே களத்தில் இருப்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தனது செயலால் மக்கள் மனதில் நிற்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவர் குறித்த மக்களின் மனநிலையை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிரொலித்துள்ளன. தமிழகத்திலிருந்த வெகு தொலைவில் ஜம்மு-காஷ்மீர் இருந்தாலும், காஷ்மீருக்காக தமிழகம் குரல் கொடுத்தது. தோளோடு தோள் நின்றதை மறக்கமாட்டோம். இந்த இரண்டு மாநிலங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால்தான் நான் இங்கு நிற்கிறேன். தமிழகத்தின் பல கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி உள்ளன.

இந்தியா மிகப் பெரிய நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாடு. இங்கு வசிக்கும் மக்களில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்ன அணிய வேண்டும், இஸ்லாமியராக இருப்பவர்கள் என்ன அணிய வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஹிஜாப் அணிவது, தாடி வளர்ப்பது, டர்பன் கட்டுவது எல்லாம் நமது விருப்பம். அது கடவுளுக்கும் நமக்குமானது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கும் மக்களின் கருத்துகளை கேட்கமாலேயே எங்களது மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் எங்குமே இதுபோல நடந்திருக்காது" என்றார்.

முன்னதாக, இந்த விழாவில் பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசும்போது, "தமிழகத்தில் நிலவும் சமூக நீதி, ஒற்றுமையை காணும்போது மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. தமிழகத்தின் சமூக நீதிக் கொள்கையால் கவரப்பட்டு, பீஹாரில் அதனை நடைமுறைப்படுத்தியவர் எனது தந்தை லாலு பிரசாத் யாதவ். சமூக நீதி குறித்த எங்களின் பார்வைக்கு தமிழகம்தான் காரணம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள இந்த நூலைப் படிப்பவர்கள், அவரது அரசியலைப் பற்றி புரிந்துகொள்ள முடியும். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் உள்ளது" என்றார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட, அதனை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை ஏற்க, பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி வரவேற்புரை ஆற்றினார்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x