Published : 28 Feb 2022 05:12 PM
Last Updated : 28 Feb 2022 05:12 PM
தமிழகத்தில் 2021-ல் நடந்த 55,713 வாகனவிபத்துகளில் 14,912 பேர் இறந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 6,852 பேர்அதிகமாகும். இருசக்கர வாகன விபத்து உயிரிழப்பு 107 சதவீதம் அதிகரித்துள்ளது,
தமிழகத்தில் சாலை விபத்துகள், இறப்புகளைக் குறைக்க போக்குவரத்து, காவல்துறை, சுகாதாரத் துறை உட்பட பல்வேறு துறைகளோடு இணைந்து தமிழக அரசு பணியாற்றி வருகிறது. இதனால், கடந்த 5ஆண்டுகளாக உயிரிழப்புகள் படிப்படியாக குறைந்து வந்தன.
குறிப்பாக, கடந்த 2016-ம் ஆண்டில் 17 ஆயிரத்து 218 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை 2020-ல் 8 ஆயிரத்து 60 ஆக குறைந்தது. அதாவது, இலக்கு நிர்ணயித்த 50 சதவீதத்தை விட 54 சதவீதமாக குறைந்தது, தமிழக அரசின் சாதனையாக இருந்தது.இந்த நிலை தற்போது மாறியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் சாலை விபத்தில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
2021-ல் 14,912 பேர் உயிரிழப்பு
இதுதொடர்பாக தமிழக அரசின் புள்ளிவிவரத்தில், ‘‘தமிழகத்தில் கடந்த ஆண்டில்நடந்த 55 ஆயிரத்து 713 சாலை விபத்துகளில்மொத்தம் 14 ஆயிரத்து 912 பேர் இறந்துள்ளனர். இதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது 85 சதவீதம் அதிகமாகும்.
இருசக்கர வாகன விபத்துகளில் மட்டும் 6,223 பேர் இறந்துள்ளனர். லாரிகளால் ஏற்பட்ட விபத்துகளில் 2,467 பேரும், கார்கள், டாக்சி விபத்துகளால் 2,467 பேரும், வேன் மற்றம் சிறிய வகை சரக்கு வாகனங்களால் 1,140 பேரும் இறந்துள்ளனர். அதுபோல், தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் 4,129 பேரும், மாநில நெடுஞ்சாலை விபத்துகளில் 4,929 பேரும் இறந்துள்ளனர்.’’என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் உயர்ந்தது ஏன்?
இதுதொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரிகள் கூறிய தாவது:
தமிழகத்தில் சாலை விபத்து மற்றும்இறப்புகளை குறைக்க சாலை பாதுகாப்புநிதி மூலம் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விதிமுறைகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்றநடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
ஆனால், கரோனா கட்டுப்பாடு காலத்தில் நீண்டநாட்கள் இயக்கப்படாமல் இருந்த வாகனங்களை மீண்டும் இயக்கும்போது விபத்து ஏற்படுவதும் அதிகரித்துள்ளது. மேலும், கரோனா அச்சத்தால் மக்கள் அதிகஅளவில் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், போதியஅளவில் பயிற்சி பெறாமலும், சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டியதாலுமே அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக சாலை விபத்துகள், உயிரிழப்புகள் குறைந்து வந்த நிலையில் மீண்டும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விபத்துகள் மற்றும் இறப்புகளைக் கட்டுப்படுத்த மாவட்டங்கள்தோறும் நடக்கும் சாலை விபத்துகளை ஆய்வு செய்து, அந்த இடத்தில் விபத்தை குறைக்க புதிய திட்டமிடல்களை உரு வாக்கி செயல்படுத்தவுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
107 சதவீதம் அதிகரிப்பு
கடந்த 2020-ம் ஆண்டில் இருசக்கர வாகன விபத்துகளில் 2,997 பேர் மட்டுமே உயிரிழந்தனர். 2021-ல் 6,223 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், ஹெல்மெட் அணியாமல் சென்றதில் 2,410 பேர் இறந்துள்ளனர். 2020-ம் ஆண்டை ஒப்பிடும்போது மொத்தஉயிரிழப்பில் 107 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிரத்யேக பாதை அமைக்க வேண்டும்
இதுதொடர்பாக சென்னை ஐஐடி உதவி பேராசிரியர் ஒருவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் சாலை விபத்துகள் மற்றும்உயிரிழப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளதற்கான காரணத்தைக் கண்டறிந்து, புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். குறிப்பாக, சாலைகளில் பேருந்துகள், இருசக்கர வாகனங்களுக்கு பிரத்யேக பாதைகள் அமைக்கவேண்டும். சாலை பாதுகாப்பு முறையை தொடர்ந்து செயல்படுத்துவதில் அலட்சியம் கூடாது. சாலைகளில் விபத்து நடக்கும்இடங்களில் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளோடு, சாலை விதிகளை மீறுவோர்மீது அபராதம் விதிப்பதை தீவிரப்படுத்த வேண்டும். சாலை விபத்துகளைக் குறைக்கஆண்டுதோறும் புதிய இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT