Published : 14 Apr 2016 03:34 PM
Last Updated : 14 Apr 2016 03:34 PM
நடிகர் விஜய் நடித்த ‘தெறி“ படம் இன்று (ஏப். 14) வெளியானது. இந்தப் படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, அடுத்த சில நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று விட்டன. ஆனால், திரையரங்குகளில் இந்த டிக்கெட்டுகள் விற்கப்படவில்லை என்றும், வெளியே கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரையில் 6 திரையரங்குகளில் ‘தெறி’ படம் வெளியிடப்படுகிறது. இதற்காக, கடந்த சில நாட்களாக இந்த திரையரங்குகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஆனால், ஒரு டிக்கெட் கூட திரையரங்கில் விற்கப்படவில்லை. திரையரங்கு முன்பும், மறைமுகமாக சில இடங்களில் வைத்தும் ரூ. 500-க்கு விற்கப்படுகிறது.
டிக்கெட் முன்பதிவுக்குச் செல்லும் ரசிகர்கள், பொதுமக்களிடம் திரையரங்குகளுக்கு வெளியே நிற்கும் இளைஞர்கள் கையில் டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு ரூ.500, ரூ.600-க்கு விற்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றும், தேர்தல் வேலைகளில் இருப்பதால் அதிகாரிகள் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், ‘தெறி’ டிக்கெட் கூடுதல் விலைக்கு விற்பது தொடர்கிறது.
இதுகுறித்து கே.கே. நகர் பிரதான சாலையில் உள்ள திரையரங்கில் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த முருகன் என்பவர் கூறியதாவது: மக்கள் புதிய படங்களின் திருட்டு சிடிக்களை வாங்க, அப்படத்தை எடுப்பவர்களே காரணம். பல கோடி ரூபாய் செலவு செய்து படத்தை எடுக்கும் அவர்கள், அந்த பணத்தை ஒரு சில நாட்களிலேயே எடுக்க டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்கின்றனர். நேர்மையான முறையில் டிக்கெட்டுகளை விற்க முன்வர வேண்டும். கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை விற்பவர்கள் மீதும், அந்த திரையரங்குகள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, டிக்கெட்டுகளுக்கு கூடுதல் பணம் பெறுவது குறித்து, இதுவரை எங்களுக்கு புகார் வரவில்லை. இன்று முதல் கூடுதல் டிக்கெட் விற்பது குறித்து கண்காணிக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT