Published : 17 Jun 2014 10:49 AM
Last Updated : 17 Jun 2014 10:49 AM
சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் திறந்துவிட வேண்டும் என்று ஆந்திர மாநில அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக தமிழக அதிகாரிகள் அடுத்த வாரம் ஆந்திரா செல்கின்றனர்.
தெலுங்கு கங்கை ஒப்பந்தத் தின்படி, சென்னைக் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் திறந்துவிடப்பட வேண்டும்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் கிருஷ்ணா நீர் திறந்துவிடப்பட்டு பூண்டி ஏரியை வந்தடைந்தது. மே 31-ம் தேதி கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத் தப்பட்டது. இந்த கால கட்டத்தில் 5.8 டிஎம்சி தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. ஆந்திரா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள கிருஷ்ணா நீர் கால்வாய் பராமரிப்புப் பணிக்காக தண்ணீர் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
தமிழக எல்லையில் ஊத்துக்கோட்டை உள்ளிட்ட சில இடங்களில் ரூ.12 லட்சம் செலவில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை வரும் 27-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல ஆந்திர எல்லைப் பகுதியில் கிருஷ்ணா நீர் கால்வாயில் நடைபெறும் பராமரிப்புப் பணியும் இம்மாத இறுதிக்குள் முடிக் கப்படும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
ஜூலை 1-ம் தேதி முதல் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறந்துவிடுவதற்கான நடவடிக்கை களை தமிழக அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னைக் குடிநீர் தேவைக்காக ஜூலை 1-ம் தேதி முதல் கிருஷ்ணா நீரை திறந்து விடும்படி ஆந்திர மாநில பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக அடுத்த வாரம் சென்னை மண்டல நீர்வள ஆதாரத் துறை தலைமைப் பொறியாளர், கிருஷ்ணா நீர் கண்காணிப்புப் பொறியாளர், பாலாறு வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆகியோர் ஆந்திரா செல்கின்றனர். முதல்வர் அனுமதி அளித்ததும் ஆந்திரா செல்லும் தேதி முடிவு செய்யப்படும். தற்போதைய நிலவரப்படி, 24-ம் தேதி செல்ல உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஜூலை 1-ம் தேதி திறந்து விடப்படும் கிருஷ்ணா நீர் அடுத்த 4 மாதங்களுக்கு தொடர்ச்சியாக பூண்டி ஏரியை வந்தடையும். எனவே சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதால், கிருஷ்ணா நீரோட்டத்தின் பெரும்பகுதி தெலங்கானா மாநிலத்துக்கு போய்விட்டதால், நீர் வரத்து பாதிக்கும் என்ற அச்சம் எழுந்தது. ஆனால், தெலங்கானா, புதிய ஆந்திரா ஆகிய மாநிலங்களின் நிர்வாகம் தெலுங்கு கங்கை ஒப்பந்தத்தின்படி சென்னைக்கு கிருஷ்ணா நீர் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT