Published : 27 Feb 2022 04:45 PM
Last Updated : 27 Feb 2022 04:45 PM

சமூக நீதிப் பயணத்தின் முதற்கட்ட முயற்சிதான் சமூக நீதிக் கூட்டமைப்பு: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் 

சென்னை: சமூகநீதிப் பயணத்தில் தமிழகத்தைக் கடந்து, இந்திய ஒன்றியம் முழுவதும் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முதற்கட்ட முயற்சிதான் அனைத்து இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தமிழக மக்கள் இமாலய வெற்றியை , மகத்தான தீர்ப்பினை மனப்பூர்வமாக அளித்து நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றி, அதனுடன் இணைந்து நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி, 2020-ல் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, 2021-ல் சட்டமன்றத் தேர்தலில் கழக ஆட்சியை உருவாக்கிய வெற்றி, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, 2022-ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி என 6 தேர்தல் களங்களில் அடுத்தடுத்து வெற்றி, வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றிருக்கிறது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.

வெற்றி பெற்றவர்கள் மார்ச் 2-ம் நாள் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலையில், மார்ச் 4 அன்று மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் வாக்களித்து தங்கள் உள்ளாட்சி அமைப்புக்கான தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். அந்தப் பொறுப்புகளுக்குக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்படுபவர்களை முழுமையான அளவில் வெற்றி பெறச் செய்யவேண்டும். அதுபோலவே, தோழமைக் கட்சியினருக்கு ஒதுக்கப்படும் இடங்களில் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நேரடித் தேர்தலில் மக்கள் தந்த மகத்தான வெற்றிக்கு வலு சேர்க்கும் வகையிலும், கட்சியின் கட்டுப்பாட்டையும், கூட்டணியின் ஒற்றுமையுணர்வையும் வெளிப்படுத்தும் வகையிலும் திமுகவின் சார்பில் வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்கள் இதனைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய பிறந்தநாளில் நான் உங்களுக்கு வழங்கும் அன்புப் பரிசாக - நன்றிப் பரிசாக ‘உங்களில் ஒருவன்’ என்கிற தன் வரலாற்றுப் புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிடுகிறேன். நாளை (பிப்ரவரி 28) நடைபெறவுள்ள அதன் வெளியீட்டு விழாவில், இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் - இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தி எம்.பி அவர்கள் நூலினை வெளியிடுகிறார். கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் , ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் , கவிப்பேரரசு வைரமுத்து , நடிகர் சத்தியராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். நூலாசிரியர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் ஏற்புரை வழங்குகிறேன்.

திமுகவின் தேவை இன்னும் அரை நூற்றாண்டு காலத்திற்கு இருக்கும் எனக் கழகத்தைத் தொடங்கியபோது அண்ணா சொன்னார். இன்றைய நிலையில், முன்பைவிடவும் தேவை அதிகமாகி இருக்கிறது. சமூகநீதிப் பயணத்தில் தமிழகத்தைக் கடந்து, இந்திய ஒன்றியம் முழுவதும் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முதற்கட்ட முயற்சிதான் அனைத்து இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு (All India Federation for Social Justice). நம் பயணம் நீண்டது, நெடியது; அது முடிவதில்லை.

எனது பிறந்தநாளையொட்டி, நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது என்பது என் அன்புக் கட்டளை. மக்களுக்கு உரிய பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். அறிவுப் புரட்சிக்கு வித்தாகும் புத்தகங்களை வழங்குங்கள். வருங்காலத் தலைமுறைக்கு நம் லட்சியங்களை எடுத்துரைக்கும் வகையில் கழகத்தில் புதிய உறுப்பினர்களைச் சேருங்கள். திராவிட மாடல் அரசின் 9 மாதகால சாதனைகளை விரிவாக எடுத்துரையுங்கள்". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x