Published : 27 Feb 2022 12:12 PM
Last Updated : 27 Feb 2022 12:12 PM
சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமினை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று (பிப்.27), குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தடுப்பூசி திட்டத்தின் கீழ், தமிகத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு 11 வகையான தடுப்பூசிகளை பயன்படுத்தி தடுக்கப்படக்கூடிய 12 வகையான நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்தும், இந்தியாவில் 2014-ம் ஆண்டிலிருந்தும் போலியோ இல்லாத நிலை உள்ளது. இந்த நிலை தொடர்ந்திடும் வகையில், இந்த ஆண்டு 27-வது சுற்று தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என, மொத்தம் 43,051 மையங்களில் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். இம்மையங்களில் 0-5 வயது வரையுள்ள 57.61 லட்சம் குழந்தைகளுக்கு (6 வயதிற்குட்பட்ட கூடுதலான குழந்தைகள் உட்பட) போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளான இன்று கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயணவழி மையங்களிலும் (Transit Booths) சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் இப்பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர் பி. செந்தில் குமார், , பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT