Published : 27 Feb 2022 09:59 AM
Last Updated : 27 Feb 2022 09:59 AM
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சந்திப்பு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் துணைமேயர் வேட்பாளர் இறுதி பரிந்துரைப் பட்டியல் அளித்தது போன்றவற்றால் திருச்சி மாநகராட்சி துணைமேயர் பதவிக்கான போட்டி மேலும் தீவிரமாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சியிலுள்ள 65 வார்டுகளில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதில் 49 இடங்களில் வென்று திமுக பெரும்பான்மையுடன் இருப்பதால், அக்கட்சியைச் சேர்ந்தவர்களே மாநகராட்சி மேயர், துணைமேயர் பதவிகளை கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளன. அதன்படி, அமைச்சர் கே.என்.நேரு, மாநகரச் செயலாளர் மு.அன்பழகனை மேயர் வேட்பாளராக முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளதால், மேயர் பதவிக்கான போட்டி ஏறக்குறைய முடிவுக்கு வந்தது. ஆனால் துணைமேயருக்கான போட்டி நாளுக்குநாள் சூடுபிடித்து வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடனேயே, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட மதிவாணனை துணைமேயர் பதவிக்கு கட்சித் தலைமையிடம் பரிந்துரை செய்தார். ஆனால், மேயர் வேட்பாளராக கருதப்படுபவரும், துணைமேயர் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மதிவாணனுக்கு துணைமேயர் பதவி கிடைக்குமா என கேள்வி எழுந்தது.
இதையடுத்து, மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட முத்துசெல்வம், விஜயா ஜெயராஜ், மண்டி சேகர் ஆகியோரும் தங்களுக்கு துணைமேயர் பதவி வழங்குமாறு அமைச்சர் கே.என்.நேருவிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கிடையே, துணைமேயர் பதவியை தெற்கு மாவட்ட திமுகவினருக்கு வழங்க அமைச்சர் கே.என்.நேரு சம்மதித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த சூழலில் மதிவாணனுக்கு பதிலாக, தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட 33-வது வார்டு திவ்யாவுக்கு துணை மேயர் பதவி கிடைக்கலாம் என கூறப்பட்டது.
காங்கிரஸும் முயற்சி
இதனிடையே, 31-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் மேயர் சுஜாதா நேற்று சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும், அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேருவையும் சந்தித்துப் பேசினார். அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்தித்ததைத் தொடர்ந்து, துணைமேயர் பதவியைப் பிடிக்க சுஜாதாவும் தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியது.
மீண்டும் மதிவாணன் பெயர்
இதுஒருபுறமிருக்க மாநகராட்சி மேயர், துணைமேயர் பதவிக்கான வேட்பாளர்கள் இறுதி பரிந்துரைப் பட்டியலை அளிக்குமாறு, தெற்கு மாவட்ட திமுகவிடம் கட்சித் தலைமை கேட்டிருந்தது. அதன்படி மேயர் வேட்பாளராக மு.அன்பழகன், துணைமேயர் வேட்பாளராக மு.மதிவாணன் ஆகியோரை பரிந்துரை செய்து தெற்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறும்போது, “அமைச்சர் கே.என்.நேரு பரிந்துரை செய்த மு.அன்பழகனை, தாங்களும் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதை உறுதிபடுத்தும் வகையில் தெற்கு மாவட்ட திமுக சார்பிலும் அன்பழகன் பெயரையே மேயர் வேட்பாளராக பரிந்துரைத்துள்ளனர். துணைமேயர் பதவியை மதிவாணனுக்குப் பெற்றுத்தர வேண்டும் என்பதில் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி உறுதியாக உள்ளார். எனவே இறுதிப் பட்டியலிலும் மதிவாணன் பெயரையே பரிந்துரை செய்துள்ளார். இதற்குப் பிறகு கட்சித் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளையும் ஆலோசித்தபின் மார்ச் 1-ம் தேதி மேயர், துணைமேயர் வேட்பாளர் பெயர்கள் கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT