Published : 27 Feb 2022 06:26 AM
Last Updated : 27 Feb 2022 06:26 AM
திருவண்ணாமலை நகராட்சியில் பாஜக பெண் வேட்பாளர்கள், கர்ப்பிணி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியது மற்றும் தேர்தலுக்கு பிறகு பாஜக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுகவினரை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து, பாஜக சார்பில் திருவண்ணாமலையில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கலந்துகொண்டு பேசும்போது, “பாஜக பெண் வேட்பாளர் மற்றும் கர்ப்பிணி நிர்வாகி தாக்கப்பட்டது குறித்து புகார் கொடுத்து ஒரு வாரமாகியும் முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்யவில்லை. காவல் துறையை ஏவல் துறையாக திமுகவினர் பார்க்கின்றனர். நடைபயிற்சிக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
கர்ப்பிணி தாக்கப்பட்டது குறித்து வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்றால் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களே, காவல்துறை மீது எப்படி மரியாதை வைப்பார்கள். பாஜகவினர் சாதுவாக உள்ளனர். இதே நிலை நீடித்தால், பாஜகவினர் மீது கை வைக்கப்பட்டால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர் ஆகியோர் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கர்ப்பிணி தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினரை கைது செய்ய வேண்டும்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்றுள்ள வெற்றியானது ஜனநாய கத்துக்கு கிடைத்த தோல்வி. மத்திய அரசின் திட்டங்களில், தி.மலை மாவட்டத்தில்தான் அதிகளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஊழல் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. அடுத்து சிபிஐ நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவின் ஊழலை அதிமுக தட்டிக் கேட்காமல் பாஜகவினர் தட்டி கேட்பதால், அவர்களுக்கு கோபம் வருகிறது. திமுகவின் அநீதியை பாஜக தட்டி கேட்கும்” என்றார். இதில், கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT