Published : 26 Feb 2022 07:31 PM
Last Updated : 26 Feb 2022 07:31 PM

தேர்தல் களத்தை சாதி, மத அடிப்படையில் சந்திப்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது: திருமாவளவன் சிறப்பு பேட்டி

சென்னை: "தேர்தல் களத்தை சாதி அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ சந்திப்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது. அதுதான் யதார்த்த நிலை" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

'இந்து தமிழ் திசை' டிஜிட்டலுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து: "தேர்தல் களத்தை சாதி அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ சந்திப்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது. அதுதான் யதார்த்த நிலை. ஆனால், ’அதையே மீண்டும் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும், அதைப் பாதுகாக்க வேண்டும், அந்த சமூக கட்டமைப்பை பாதுகாக்க வேண்டும், சாதி... சாதியாகத்தான் இருக்க வேண்டும்’ என்று நினைப்பதுதான் தவறு.

வெற்றி பெற்றதற்கு பின்னால், அதை மாற்ற முயற்சி எடுக்கின்றனர். அப்படியாக, வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததால், சமத்துவபுரம் என்ற ஒரு திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்குகிறார். அந்த சமத்துவபுரத்துக்குள் அனைத்து சாதியினரும் கலந்து வாழ வேண்டும் என முடிவு எடுக்கிறார். அங்கு ஒரு 40 சதவீதம் பட்டியலின மக்கள் இருக்க வேண்டும், மற்ற சாதிகளைச் சேர்ந்தவர்கள் 60 சதவீதம் இருக்க வேண்டும். ஒரு வாழிடத்துக்குள் அனைத்து சாதியினரும் கலந்திருப்பது அவசியம்.

இந்த சிந்தனை பாஜகவுக்கு வருமா? சமத்துவபுரம் என்கிற சிந்தனை வருமா? அதுதான் பிரச்சினை. அதைதான் நாங்கள் கேள்வியாக்குகிறோம்.

சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தாலும், சாதி அடிப்படையில் வெற்றி பெற்று வந்திருந்தாலும், ஆட்சிக்கு வந்த பின்னர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று திமுக சட்டம் கொண்டு வந்தது. இதை பாஜகவினர் செய்வார்களா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்த திமுக, தேர்தல் களத்தில் சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கலாம். ஆனால், வெற்றி பெற்ற பின்னர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற புரட்சிகரமான திட்டத்தை அவர்கள் கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாததற்கு காரணம், இந்தச் சமூக அமைப்பு அவ்வளவு சாதி இறுக்கம் கொண்டதாக ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதை அவ்வளவு சீக்கிரமாக தளரச் செய்ய முடியாது, நெகிழ வைத்திட முடியாது, அதை தகர்த்தெறிந்திட முடியாது. அதுதான் புரட்சிகரமான அமைப்புகளே எதிர்கொள்ள வேண்டிய நிலை. 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியிலிருந்த மேற்கு வங்கத்தில்கூட கம்யூனிஸ்ட் கட்சிகளால் அதில் பெரியவிதமான மாற்றத்தை உண்டாக்க முடியவில்லை.

ஆனால், அடித்தட்டு மக்களுக்கான திட்டங்களை அவர்களால் அறிவிக்க முடிந்தது. கேராளவிலும் இன்னும் சாதி இறுக்கம் இருக்கிறது. ஆனால், அங்கும் கோயிலுக்குள் நுழையலாம் என சட்டம் கொண்டு வரப்படுகிறது. எளிய மக்களுக்கான திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் இருப்பதால்தான், அடித்தட்டு மக்களின் நலன்கள் கருத்தில் கொள்ளப்படுகிறது.

இதே பாஜக ஆட்சியில் இருந்தால், அதுபோன்ற சட்டங்களைக் கொண்டு வரப்போவது இல்லை. மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வருவார்கள். பசுவதையைத் தடுக்க சட்டம் கொண்டு வருவார்கள். சாதி மறுப்பு திருமணம் செய்யக்கூடாது என சட்டம் கொண்டு வருவார்கள். இப்படி பழைய சமூக கட்டமைப்பை பாதுகாப்பதற்காகத்தான் அவர்கள் சட்டம் கொண்டு வருவார்கள். அதனால்தான் பாஜகவை விமர்சிக்கிறோம்" என்றார்.

வீடியோ வடிவிலான முழுயான பேட்டி > இங்கே

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x