Published : 26 Feb 2022 05:21 PM
Last Updated : 26 Feb 2022 05:21 PM

மதுரை மாநகராட்சிக்கு இனி 5 மண்டலத் தலைவர்கள் - விரைவில் அதிகாரிகள், பணியாளர்கள் நியமனம்

மதுரை: மதுரை மாநகராட்சி புதிய கவுன்சிலர்கள், புதிய மேயர் பொறுப்பேற்ற பிறகு, மாநகராட்சியின் புதிய 5 மண்டலம் செயல்பட தொடங்குவதற்கான புதிய உதவி ஆணையர், மற்ற பணியாளர்கள் நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மதுரை மாநகராட்சி 72 வார்டுகளை கொண்டிருந்தது. அதன்பின், மாநகராட்சி எல்லைகளை விரிவாக்கம் செய்து மாநகராட்சியுடன் ஆனையூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 நகராட்சிகள், ஹார்விப்பட்டி, திருநகர், விளாங்குடி ஆகிய 3 பேரூராட்சிகள் மற்றும் 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு வார்டுகள் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டன. அதன்பிறகும் கடந்த மாநகராட்சி நிர்வாகத்தில் 4 மண்டலங்களும், அதற்கான மண்டலத் தலைவர்கள் இருந்தனர். தற்போது மாநகராட்சியில் 100 வார்டுகளும், 20 லட்சம் மக்கள் வசிப்பதால் மண்டலங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வரும் மார்ச் 2ம் தேதி புதிய கவுன்சிலர்கள் பதவியேற்புக்கு பிறகு இனி 5 மண்டலங்களாக செயல்பட தொடங்குகிறது. அதனால், இதுவரை 4 மண்டலத் தலைவர்கள் மட்டுமே இருந்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு இனி 5 மண்டலத் தலைவர்கள் நியமிக்கப்படுவுள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: ”விரிவாக்கம் செய்யப்பட்ட 28 வார்டுகளில் ஏற்கெனவே இருந்த குடியிருப்புகள், புதிதாக உருவாக்கப்படும் புறநகர் குடியிருப்புகளில் சாலை, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் இல்லை. குப்பை பராமரிப்பும் மோசமாக இருக்கிறது. அதேநேரத்தில், அனைத்து வசதிகளும் கொண்ட பழைய மாநகராட்சி வார்டுகளை போல், புதிய விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளிலும் மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் பாதாள சாக்கடை வரிகளை கறாராக வசூல் செய்துகிறது. இது மாநகராட்சி நிர்வாகம், புறநகர் நகர் விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக உதயமாகும் ஐந்தாவது மண்டலத்திற்கு மண்டலத் தலைவர் மட்டுமில்லாது, புதிய உதவி ஆணையரும் நியமிக்கப்படுகிறார். 5 மண்டலங்களுக்கான வார்டுகள் விவரம் வருமாறு:

1-வது மண்டலம் கிழக்கு மண்டலமாகவும், 2-வது மண்டலம் வடக்கு மண்டலமாகவும், 3-வது மண்டலம் மத்தியம் மண்டலமாகவும், 4-வது மண்டலம் தெற்கு மண்டலமாகவும், 5-வது மண்டலம் மேற்கு மண்டலமாகவும் செயல்பட இருக்கிறது. இதில், முதல் மண்டலத்தில் 3 முதல் 14 வார்டுகள் வரையும், 16, 17, 18, 19, 36 மற்றும் 40வது வார்டுகள் இடம்பெறுகின்றன.

இரண்டாவது மண்டலத்தில் 1, 2, 15, 20 முதல் 28 வரையும், 31 முதல் 35 வரையும், 63 முதல் 66 வரையும் உள்ள வார்டுகள் இடம்பெறுகின்றன. மூன்றாவது மண்டலத்தில் 50, 51, 52, 54 முதல் 62 வரையும், 67 முதல் 70 வரையும் 75, 75, 77 ஆகிய வார்டுகளும் இடம்பெற்றுள்ளன. 4வது மண்டலத்தில் 29, 30, 41 முதல் 49 வரையும், 53 மற்றும் 85 முதல் 90 வரையும் உள்ள வார்டுகள் இடம்பெற்றுள்ளன. 5வது மண்டலத்தில் 71 முதல் 74 வரையும், 78 முதல் 84 வரை மற்றும் 91 முதல் 100 வரை வார்டுகள் இடம்பெற்றுள்ளன.

கவுன்சிலர்கள், புதிய மேயர் பொறுப்பேற்ற பிறகு புதிய மண்டலத்திற்கான உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர், திட்டம் மற்றும் நிர்வாகப் பிரிவுக்கான அதிகாரிகள், பணியாளர்கள் நியமனம் செய்து, இந்த புதிய 5 மண்டலங்கள் செயல்பட தொடங்கும். மேலும், வரி வசூலிப்பதற்கான தனி சாஃப்ட்வேர் உள்ளிட்டவையும் உருவாக்கப்படும். தற்போது அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது” என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x