Last Updated : 26 Feb, 2022 04:33 PM

3  

Published : 26 Feb 2022 04:33 PM
Last Updated : 26 Feb 2022 04:33 PM

'கருணாநிதிக்கு கூட இவ்வளவு பழிவாங்கும் உணர்வு இல்லை' - ஸ்டாலின் மீது எஸ்.பி.வேலுமணி சாடல்

கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி

கோவை: "மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கூட இவ்வளவு பழிவாங்கும் உணர்ச்சி இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் மோசமாக உள்ளார்" என்று கட்சி நிர்வாகிகளிடையே அதிமுக கொறாடாவும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில், எஸ்.பி.வேலுமணி. தலைமையில் கோவை மாநகர், புறநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.26) நடைபெற்றது. இதில், கட்சி நிர்வாகிகளிடையே எஸ்.பி.வேலுமணி பேசியது: "அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. ஒரு சிலர் திமுகவுக்கு செல்கின்றனர். அவர்களுக்கு அக்கட்சியில் மதிப்பில்லை. சென்ற வேகத்தில் திரும்பிவர தயாராகின்றனர். ஒருவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால், அடுத்தமுறை மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், திமுகவுக்கு சென்றால் வாய்ப்புக்கான கடைசி இடத்தில் இருக்க வேண்டி வரும்.

திமுகவினர் எப்படி இந்த அளவுக்கு வெற்றி பெற்றனர் என்று மக்களே குழம்பிப்போயுள்ளனர். அதிமுகவினர் மீது காவல்துறையினர் தொடர்ந்து பொய்வழக்கு போடுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். ஜெயக்குமாரைப் போல எங்களையும் சிறையில் அடையுங்கள். அதற்குமேல் உங்களால் என்ன செய்ய முடியும். இதற்கெல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல. பொய்வழக்குகளில் நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். தோல்வியைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். வேட்பாளர்கள், கிளைச் செயலாளர்கள் என அனைவரும் தேர்தலின்போது இரவு, பகலாக பாடுபட்டுள்ளீர்கள். அதற்கு பலன் கிடைக்கும். கண்டிப்பாக நமக்கு வெற்றிவரும்.

திமுகவை எப்படியும் வீழ்த்துவோம். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கூட இவ்வளவு பழிவாங்கும் உணர்ச்சி இல்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் மோசமாக உள்ளார். யார், யார் திமுகவை, முதல்வரை எதிர்த்து பேசுகிறார்களோ, அவர்கள் மீது தற்போது பொய் வழக்கு போடுகின்றனர். எனவே, அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். ஜெயக்குமார் கைதை கண்டித்து வரும் 28-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிகமானோர் திரண்டுவந்து கலந்துகொள்ள வேண்டும்" என்றார்.

இந்தக் கூட்டதில், எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x