Last Updated : 26 Feb, 2022 03:16 PM

3  

Published : 26 Feb 2022 03:16 PM
Last Updated : 26 Feb 2022 03:16 PM

அரசு எச்சரித்தும் உடனே புறப்படாதது ஏன்?- உக்ரைனிலிருந்து ஈரோடு திரும்பிய மாணவி கர்ஷினி பேட்டி

ஈரோடு: போர் பதற்றத்தைப் பயன்படுத்தி விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டதால் தான் அரசு எச்சரிக்கை விடுத்தும் மாணவர்கள் உடனடியாக நாடு திரும்ப முடியாத சூழல் நிலவி வருகிறது என்று, உக்ரைனில் இருந்து ஈரோடு திரும்பிய மாணவி கர்ஷினி தெரிவித்தார்.

ஈரோடு அடுத்த மூலப்பாளையம் காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவி, கெளசிக் என்ற மகன், கர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இதில் கர்ஷினி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உக்ரைன் தலைநகரில் உள்ள போகோமோலக்ஸ் நேஷனல் யுனிவர்சிட்டியில் மருத்துவக் கல்வியில் சேர்ந்து படித்து வருகிறார்.

இந்நிலையில் உக்ரைனில் ஏற்பட்டு உள்ள போர் சூழல் காரணமாக மாணவி கர்ஷினி சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

உக்ரைன் நிலவரம் குறித்து அவர் ‘செய்தியாளர்களிடம்’ கூறியதாவது:

“கடந்த மூன்று மாதங்களாகவே போர் சூழல் நிலவி வந்தது. நாங்கள் இருந்த உக்ரைன் தலைநகரில் எந்த பிரச்சினையும் இல்லை. எல்லை பகுதியில் தான் போருக்கான பிரச்சினை இருந்தது. எனினும், நாடு திரும்ப எங்களின் பெற்றோர்கள் வலியுறுத்தினர். அதன்பேரில் நாடு திரும்ப முயற்சித்தாலும் விமான டிக்கெட்கள் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் மூன்று மடங்கு விலை ஏற்றத்துடன் உள்ளது. இதன் காரணமாகவே அதிக அளவில் மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் அங்கேயே உள்ளனர்.

இந்திய தூதரகம் தங்களை பாதுகாத்து பத்திரமாக திரும்ப அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். தன்னுடன் படிக்கும் நண்பர்கள் 24ம் தேதிக்கு மேல் தான் விமான டிக்கெட்கள் புக் செய்திருந்தனர். எனினும், விமான சேவை இல்லாததால் அவர்கள் அங்கேயே தங்கியுள்ளனர். அவர்கள் உணவு, தண்ணீர் பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

அவர்கள் இருக்கக்கூடிய பகுதிகள் அருகில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. அங்கு தங்கி உள்ளவர்களுக்கு முறையாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இந்திய தூதரகம் எல்லை பகுதிகளில் இருந்து மட்டுமே அழைத்து வர முடியும் என்று கூறி உள்ளது. ஆனால் எல்லை பகுதிகளுக்குச் செல்ல சுமார் 20 மணி நேரத்திற்கு மேலாகும். பாதுகாப்பாகவும் செல்ல முடியாது. எல்லை பகுதிகளுக்கு செல்ல பாதுகாப்புடன் கூடிய வாகன வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு உள்ளனர். இங்கு இருந்து அதிகமாக உக்ரைன் நாட்டுக்கு மருத்துவம் படிக்க செல்ல காரணம் இந்தியாவை விட அங்கு மருத்துவம் படிக்க ஆகும் செலவு மிகக் குறைவு. உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் தான் அதிக அளவில் இந்தியர்கள் உள்ளனர். படிப்பு சம்பந்தமாக எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. அங்கு உள்ள மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x