Published : 26 Feb 2022 02:30 PM
Last Updated : 26 Feb 2022 02:30 PM

”தைரியமாகவும் இருங்கள்” - உக்ரைனில் தவிக்கும் மாணவர்களுடன் வீடியோ கால் மூலம் பேசிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுடன் நேரடியாக வீடியோ கால் மூலம் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றும், இருக்கும் இடத்தில் பாதுகாப்பாகவும், தைரியமாகவும் மாணவர்கள் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த சில நாட்களாக ரஷ்யா நாட்டு ராணுவம் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் உக்ரைன் நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. உக்ரைன் நாட்டில் உயர்கல்வி பயில்வதற்காகச் சென்று தங்கியுள்ள தமிழக மாணவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஏற்கெனவே கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், அங்கு நிலவிவரும் போர்ச் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு உடனடியாக தாயகம் திரும்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்களும் தமிழகத்தில் வாழும் அவர்களின் பெற்றோர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாணவர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அவ்வாறு உடனடியாக அழைத்து வருவதற்கான பயணச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் பெற்றோர்களும் தொடர்புகொள்வதற்கு உடனடியாக மாநில கட்டுப்பாட்டு அறையில் இதற்கென தனி குழு ஏற்படுத்தப்பட்டு, வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையர் தலைமையில் குழுவின் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் நாட்டில் தற்பொழுது தங்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மௌனி சுஜிதா, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டனி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நவநீத ஸ்ரீராம் ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின், வீடியோ கால் வாயிலாகத் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றும், மாணவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது, உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுத்துறைச் செயலாளர் டி. ஜகந்நாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x