Published : 26 Feb 2022 01:45 PM
Last Updated : 26 Feb 2022 01:45 PM
சென்னை: இணையதள தொலைக்காட்சியில் மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேசிய பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாமின் பெற்றோருக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து இணையதள தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாமின் பெற்றோருக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாம், கடந்த 24-ம் தேதியன்று முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது, அம்மாணவரின் பெற்றோர் ஆ.தில்ஷாத்பேகம், அ.அஸ்மத்துல்லாஹ் ஆகியோர் தாங்கள் குடியிருந்த சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் இருந்த வீடு வர்தா புயலால் இடிந்துவிட்டதாகவும், அதனை மீண்டும் கட்டுவதற்கு தங்களிடம் போதிய பொருளாதார வசதியில்லை எனவும், எனவே குடியிருக்க வீடு ஒன்று வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.
அப்பெற்றோரின் வேண்டுகோளை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் ஒரு குடியிருப்பை ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையினை வழங்கினார். ஒதுக்கீட்டு அணையினை பெற்றுக் கொண்ட மாணவர் ஏ.அப்துல் கலாமின் பெற்றோர், தமிழக முதல்வருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.கோவிந்த ராவ் ஆகியோர் உடனிருந்தனர் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இணையதள தொலைக்காட்சி ஒன்று பள்ளி மாணவர்களிடம், ’வாழ்க்கையில் உங்களுக்கு பிடிக்காத நபர்கள் யாராவது இருக்கின்றனரா?’ என்ற தலைப்பில் பேட்டி எடுத்திருந்தது. அந்தச் சேனலுக்காக மாணவர் அப்துல் கலாம் பேசியது: "எல்லோரும் இந்த உலகத்துக்கு ஒரே மாதிரி சமம். நமக்கு யாரையும் பிடிக்கவில்லை என்று நாம் முடிவெடுக்கக்கூடாது. எல்லோரும் நம்மை போலத்தான். சிலருக்கு கஷ்டம் இருக்கும், அந்த கஷ்டத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார்கள். உள்ளேயே வைத்துக் கொண்டு இருப்பார்கள். இதுதான் என் கருத்து.
யாரையும் பிடிக்காது என கூற வேண்டாம். என்னையும் எல்லோரும் "பல்லா" என்றுதான் அழைப்பார்கள். நான் எல்லோரையும் பிடிக்காது என்று சொல்ல வேண்டும். அனைவருமே நண்பர்கள் மாதிரிதான். ஒற்றுமை இல்லாத நாடு ஏன் இருக்க வேண்டும். நம்ம நாடு ஒற்றுமையான நாடு என்று சொல்கிறோம், ஒற்றுமை இல்லாமல் இருந்தால் எப்படி? இந்த கருத்து எல்லோருக்கும் சேர வேண்டும். அப்போதுதான் மனிதநேயம் அதிகமாகும். இல்லையென்றால் ஸ்பைடர் படத்தில் வரும் வில்லன் சுடலை போல, நிறைய பேர் உருவாகிவிடுவார்கள். மனித நேயம் வளரணும்’ என்று அவர் பேசிய அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT