Published : 26 Feb 2022 11:52 AM
Last Updated : 26 Feb 2022 11:52 AM
சென்னை: பகுதி நேர சிறப்பாசிரியர்களை உடனடியாக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில்,தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தப் போராட்டம் நீடிக்கும் போதிலும் அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்கக்கூட அரசு முன்வராதது ஏமாற்றமளிக்கிறது.
பணி நிலைப்பு கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடத்தி வரும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுடன் அவர்களின் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளனர். பகலில் கொளுத்தும் வெயிலிலும், இரவில் கொட்டும் பனியிலும் வெட்ட வெளியில் தான் அவர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களின் போராட்டம் இன்னும் ஓரிரு நாட்கள் நீடித்தால் கூட, அவர்களில் பலரின் உடல்நிலை பாதிக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
பகுதி நேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக அவர்களின் பிரதிநிதிகள் சிலரை, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேற்று தலைமைச் செயலகத்துக்கு அழைத்துப் பேசியுள்ளார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியையும் அவர்களில் சிலர் சந்தித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் பணி நிலைப்பு கோரிக்கையை பரிசீலிப்பதற்கு கூட தமிழ்நாடு அரசு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் சிறப்பாசிரியர்களின் போராட்டம் தொடர்கிறது.
பகுதி நேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை; பத்தாண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருபவை. இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக, எதிர்க்கட்சியாக இருந்த போது, அதனால் ஆதரிக்கப்பட்டவை. பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை பத்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி ஆதரித்து வந்துள்ளது; அவர்களுக்காக குரல் கொடுத்து வந்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் தகுதி மற்றும் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் நியமிக்கப்பட்டனர். வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது; அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணியாற்றலாம்; ஒரு பள்ளிக்கு ரூ.5,000 வீதம் 4 பள்ளிகளுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம் ஈட்ட முடியும் என்று அரசு அறிவித்ததால் தான் அவர்கள் இப்பணியில் சேர்ந்தனர்.
ஆனால், அவர்கள் ஒரு பள்ளியில் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். அதனால் அவர்களுக்கு அதிகபட்சமாகவே ரூ.5000 மட்டும் தான் ஊதியம் கிடைத்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தலை அடுத்து, அவர்களின் ஊதியம் 2014&ஆம் ஆண்டில் ரூ.7,000 ஆகவும், பின்னர் ரூ.7,700 ஆகவும் உயர்த்தப் பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், அவர்களின் பணி நிலைப்பு கோரிக்கை மட்டும் கடந்த பத்தாண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று கடந்த 2017 மற்றும் 2019- ஆம் ஆண்டுகளில் அப்போதைய பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்த போதிலும், அந்த அறிவிப்பு அறிவிப்பாகவே நின்று விட்டது வேதனை.
தமிழக அரசு நினைத்தால் அவர்களை பணி நிலைப்பு செய்து காலமுறை ஊதிய வழங்க ஆயிரம் வழிகள் உள்ளன; ஆனால், அடுத்தடுத்து வரும் ஆட்சியாளர்களுக்கு மனம் தான் இல்லை. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில்,‘‘பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அதை நிறைவேற்றும் வகையிலும், பகுதி நேர சிறப்பாசிரியர்களின் துயரங்களைத் துடைக்கும் வகையிலும் அவர்களை பணி நிலைப்பு செய்வதற்கான ஆணையை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT