Published : 01 Apr 2016 02:05 PM
Last Updated : 01 Apr 2016 02:05 PM

திமுகவின் களப்பணிகளுக்கு பலன் நிச்சயம்: சேலம் சுஜாதா நம்பிக்கை

சைக்கிள் செல்லக் கூடிய பாதையில் ஆட்டோவை செலுத்திடும் வல்லமை என்பது அரசியல் களத்தில் மிக முக்கியம். அந்த வகையில், திருச்சியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில், தனக்கு வழங்கப்பட்ட இரண்டு நிமிடத்தில் அசத்தலாக பேசி கவனத்தை ஈர்த்தவர், திமுக பேச்சாளர் 'சேலம்' சுஜாதா. குறிப்பாக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் குரலில் மிமிக்ரி செய்த சுஜாதாவின் அந்தப் பேச்சு, சமூக வலைதளங்களிலும் செம ஹிட். தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாராக இருந்தவரை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தோம்.

ஒரே நாளில் இணையப் பிரபலம் ஆகிவிட்டீர்களே?

ஆச்சரியம்தான். நிறைய பேர் போன் மூலமாக பாராட்டினார்கள். சாலையில் போகும்போது கூட 'நன்றாக பேசினீர்கள்' என்றார்கள். அந்த வீடியோ மூலமாக நிறைய புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

திமுக பேச்சாளர் ஆனதன் பின்னணி?

கட்சியில் இணைந்து 6 மாதம் கழித்து மகளிர் மாநாட்டில் பேசினேன். அந்த பேச்சின் மூலமாக தலைமை கழகப் பேச்சாளராக என்னை அறிவித்தார்கள். இப்போது கழக மகளிரணி மாநில பிரச்சாரக் குழு செயலாளர் பதவியில் இருக்கிறேன். திமுகவில் இணைந்து 15 ஆண்டுக் காலத்தில் தற்போது மாநில பொறுப்புக் கொடுத்திருக்கிறார்கள். பல மாநாடுகள், 14 வீரவணக்கக் கூட்டங்கள் பல இடங்களில் பேசியிருக்கிறேன். என்னை சுஜாதா என்று தெரிந்தது என்றால் விழுப்புரம் மாநாட்டில் பேசியபோது தான்.

மிமிக்ரி-க்கு தனிப் பயிற்சி செய்தீர்களா? இந்த உத்தியின் பின்னணி என்ன?

நான் பயிற்சி எல்லாம் எடுக்கவில்லை. முதலில் நான் மிமிக்ரி கலைஞர் கிடையாது. வேறு யார் குரலையும் என்னால் பேச முடியாது. இயற்கையாகவே எனக்கு அம்மையார் குரல் வருகிறது. அவ்வளவு தான்.

உங்கள் மேடைப் பேச்சுகளில் முதல் டார்கெட்டே முதல்வர் ஜெயலலிதாவாக இருக்கிறாரே?

அதிமுகவின் 5 ஆண்டுக் காலம் மிகவும் வேதனையாக இருக்கிறது. அம்மையார் வாக்குறுதிகளை அள்ளி வீசினாரே தவிர எதையுமே நிறைவேற்றவில்லை. அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஆட்சி வந்தால் 20 லிட்டர் தண்ணீர் தருவேன் என்றார். தமிழ்நாட்டிற்கு வழங்கவே இல்லை. சென்னைக்கு மட்டும் இறுதியில் கொடுக்கிறார். இன்றைக்கு தேர்தலே அறிவித்துவிட்டார்கள். 60 வயது நிரம்பியவர்களுக்கு பஸ் பாஸ் தருகிறேன் என்றார். தமிழ்நாடு முழுவதும் தந்திருக்க வேண்டும், ஆனால் இறுதி காலத்தில் சென்னைக்கு மட்டும் கொடுத்திருக்கிறார்.

5 ஆண்டுக்கால கலைஞரின் ஆட்சியில் மின்கட்டணம், பேருந்து உள்ளிட்ட கட்டணம் எதுவுமே ஏற்றப்படவில்லை. ஆனால், அம்மையார் ஆட்சியில் பால் விலை ஏற்றம், அண்ணா நூலகம் மூடு விழா, அருமையான சட்டமன்றத்தை மருத்துவமனையாக மாற்றியது என சொல்லிக் கொண்டேப் போகலாம்.

தேர்தல் பிரச்சார அனுபவங்கள் பற்றி...

முதியோர் உதவித் தொகை ஒர் ஆண்டுக் காலம் பாதிப்பேருக்கு வரவில்லை என்று மக்கள் புலம்புகிறார்கள். கலைஞரின் ஆட்சியிலே 500 ரூபாய் உதவித்தொகை மாதம் தவறாமல் வந்தது. 13000 மக்கள் நலப் பணியாளர்களுக்கு கலைஞரின் ஆட்சியில் வேலை தரப்பட்டது என்பதற்காக வேலை நீக்கம் செய்துவிட்டார்கள். இப்படி பல கொடுமைகள் இருக்கிறது.

தளபதி ஸ்டாலின் மற்றும் அக்கா கனிமொழி ஆகியோர் திண்ணைப் பிரச்சாரத்தின் மூலமாக அதிமுகவின் அவல ஆட்சியை எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார்கள். அதைத்தான் மும்முரமாக செய்து கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக இந்தத் தேர்தலில் திமுகவிற்கு வெற்றிதான்.

திமுகவின் நிலை இப்போது எப்படி இருக்கிறது?

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்த கட்சி திராவிட முன்னேற்ற கழகம். அதை தலைவர் பார்த்துக் கொள்வார். 'நமக்கு நாமே' பயணம் மூலமாக மக்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பல இளைஞர்கள் நீங்கள் எளிமையாக இருக்கிறீர்கள் என்று தளபதி ஸ்டாலினிடம் எல்லாம் பேசினார்கள். மழை வெள்ளத்தில் அம்மையார் வெளியே வரவில்லை, தலைவர் மற்றும் தளபதி இருவருமே மக்களோடு மக்களாக நின்று களப் பணியாற்றினார்கள். அப்படியிருக்கும் போது மக்கள் எப்படி அம்மையாருக்கு வாக்களிப்பார்கள்? திமுகவின் களப்பணிகளுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x