Last Updated : 26 Feb, 2022 08:52 AM

 

Published : 26 Feb 2022 08:52 AM
Last Updated : 26 Feb 2022 08:52 AM

ஜிப்மரில் அத்தியாவசிய மாத்திரைகள் கையிருப்பில்லை: பணம் கொடுத்து மருந்துகளை வாங்கும் ஏழை மக்கள் தவிப்பு

புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை யில் வைட்டமின் தொடங்கி முக்கிய 37 வகை அத்தியாவசிய மாத்திரைகள் கையிருப்பில் இல்லை. இங்கு வரும் ஏழை எளிய நோயாளிகள் வெளியே பணம் செலுத்தி, மாத்திரைகளை வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ளது ஜிப்மர் மருத்துவமனை. மத்திய அரசின் கட்டுபாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.

கரோனா அச்சுறுத்தலால் கடந்தஇரு ஆண்டுகளாக இங்கு வெளிப்புறச் சிகிச்சைகள் தொடர்ச்சியாக தரப்படவில்லை. தொலைபேசியில் முன்பதிவு செய்து அதன்பிறகே சிகிச்சைக்கு வரவேண்டிய நிலை இருந்தது. தற்போதுதான் நீண்ட மாதங்களுக்குப் பின், வெளிப்புற சிகிச்சைகள் முழுமையாக செயல்படுகிறது.

அதேபோல், கடந்த இரு ஆண்டுகளாக தொற்றா நோய்களான நீரிழிவு, மனநோய், இதய நோய், நரம்பியல், இதய அறுவை சிகிச்சை நோயியல், நரம்பு அறுவை சிகிச்சை நோயியல், சிறுநீரகவியல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் ஆகியவற்றுக்கு சிகிச்சையில் உள்ளோருக்கும் மாதந்தோறும் இலவசமாக தரவேண்டிய மருந்து மாத்திரைகள் நிறுத்தப்பட்டன. தற்போது மீண்டும் மாத்திரைகளை தருவதாக ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வருவோருக்கு அத்தியாவசிய மாத்திரைகள் கையிருப்பில் இல்லை என்று கூறுகின்றனர். இதய நோய்க்கு விழுப்புரத்தில் இருந்து சிகிச்சைக்கு வந்த விவசாயி ஒருவர்கூறுகையில், "இதய பிரச்சினையால் சிகிச்சைக்கு வந்தேன். மாத்திரை வாங்க சென்றபோது இல்லைஎன்று கூறிவிட்டனர். அதே நேரத்தில் மாத்திரை தந்ததாக குறித்து கொள்கின்றனர். மாத்திரையை வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு கூறுகின்றனர்" என்றார். இவரைப் போல் பலர் மாத்திரை கிடைக்காமல் தவிப்பதை காண முடிந்தது.

ஜிப்மர் வட்டாரங்களில் விசாரித்தபோது, "மாத்திரை தட்டுப்பாடு உள்ளது. சாதாரண வைட்டமின் மாத்திரை தொடங்கி 37 அத்தியாவசிய மாத்திரைகள் தற்போது கையிருப்பில் இல்லை. தொற்றா நோய்களில் தொடர் சிகிச்சையில் மனநோய், புற்றுநோய் தொடங்கி பல பிரிவுகளில் ஏராளமான ஏழை நோயாளிகள் மாதந்தோறும் மருந்து வாங்க வந்து, ஏமாற்றத்துடன் செல்கின்றனர். அதே நேரத்தில், ஜிப்மர் வளாகத்தில் பணம் செலுத்தி வாங்கும் பார்மசிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. " என்றனர்.

இச்சிக்கல் குறித்து ஜிப்மர் பாதுகாப்புக்குழு அமைப்பின்தலைவர் முருகனிடம் கேட்டதற்கு,"தொற்றா நோயாளிகளுக்கு சிகிச்சை பெறுவோர் பலருக்கும் மருத்துவர்கள் எழுதி தரும் மாத்திரைகள் ஜிப்மரில் கையிருப் பில் இல்லை. இப்பிரச்சினை தற்போது அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஒதுக்கிய நிதியை ஜிப்மர் இயக்குநர் சரியாக பயன்படுத்தவில்லை. இதுபற்றி ஆதாரப்பூர்வமாக விரைவில் தெரிவிப்போம்." என்று குறிப்பிட்டார். இதுபற்றி அறிய ஜிப்மர் மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொண்டபோது, அவர் தொலைபேசியை எடுக்கவில்லை.

இலவச மாத்திரைகள் வழங்குவது நிறுத்தப்பட்டது தொடர்பாக பாஜகவின் புதுச்சேரி மாநிலத்தலைவர் சாமிநாதனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அவர் ஜிப்மர் மருத்துவ உயர் அதிகாரிகளிடம் இதுபற்றி விசாரித்தார்.

இதுதொடர்பாக மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறுகையில்,"இதுபற்றி ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளரிடம் கேட்டேன். ஜிப்மரில் அனைத்து மாத்திரைகளும் இலவசமாக தர வேண்டும். அதுதான் நடைமுறை.கரோனாவால் மாத்திரைக்களுக்கான டெண்டர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதை சரி செய்யும் முயற்சியில்ஜிப்மர்தரப்பு உள்ளது. மீண்டும் டெண்டர் வைத்து 15 நாட்களுக்குள் இப்பிரச்சினையை சரி செய்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார். மாத்திரைகள் விநியோகத்தில் உள்ள பிரச்சினை விரைவில் சரியாகும் என்று உறுதி அளித்துள்ளார்“ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x