Published : 26 Feb 2022 11:00 AM
Last Updated : 26 Feb 2022 11:00 AM

மதுரை மேயரை தேர்வு செய்வதில் திமுக நிர்வாகிகள் திணறல்: குழப்பம் அதிகரிப்பால் தவிக்கும் கவுன்சிலர்கள்

மதுரை

மதுரை மாநகராட்சி மேயர் வேட் பாளரை தேர்வு செய்வதில் திமுக நிர்வாகிகளிடையே ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால் நாளுக்கு நாள் குழப்பம் அதிகரித்து வருகிறது.

மதுரை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் 100 வார்டுகளில் திமுக கூட்டணி 80 இடங்களை வென்றது. திமுக மட்டுமே 67 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. திமுக சார்பில் மேயர் வேட்பாளரை முடிவு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறிய தாவது:

மேயர் வேட்பாளர் ஒருவரை மதுரை மாநகர் திமுக நிர்வாகிகள், அமைச்சர்களால் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யும் அளவு நிலைமை இன்னும் மாறவில்லை. மாறாக போட்டி அதிகரித்தே வருகிறது. தனது மருமகள் விஜயமவுசுமியை மேயராக்க முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் வெளிப்படையாக முழுவீச்சில் சிபாரிசு செய்து வருகிறார். இவர் முதல்வரைத் தவிர திமுக முக்கிய நிர்வாகிகளான துரைமுருகன் உள்ளிட்ட பலரை சந்தித்து வருகிறார். எப்படியாவது தனது குடும்பத்துக்கு மேயர் வாய்ப்பை அளிக்க வேண்டும் எனக் கேட்டு வருகிறார்.

யார் சொன்னால் முதல்வர் கேட்பாரோ அவர்களை எல்லாம் ஒருவர் விடாமல் 5 நாட்களாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த அளவு பகீரத முயற்சியில் ஈடுபட்டுள்ள பொன்.முத்து ராமலிங்கத்துக்கு மதுரையில் உள்ள அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், திமுக மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி, எம்.மணிமாறன் ஆகியோரது ஆதரவு இருக்க வேண்டும். ஆனால் இவர்களது ஆதரவு முழுமையாக கிடைக்குமா என்பது சந்தேகமே.

அதே நேரம் தங்கள் ஆதரவு வேட்பாளர் இவர்தான் என வெளிப்படையாகத் தெரிவிக்கவும் அமைச்சர்கள் உள்ளிட்ட மற்றவர்கள் தயங்குகின்றனர். அவ்வாறு சொன்னால் தங்களின் கருத்துக்கு எதிராக மற்றவர்கள் அணிதிரண்டு விடுவர் என்ற சந்தேகம் இவர்களின் மனதில் உள்ளது.

மேலும் எப்படியாவது தனது ஆதர வாளர் ஒருவரை மேயராக்கிவிட வேண்டும் என தீவிர முயற்சியில் இறங்கும் அளவு முக்கிய நிர்வாகிகளின் மனதில் வேட்பாளர்கள் யாரும் இடம் பெறவில்லை. இதுவே மேயர் தேர்வில் தொடர் குழப்பத்துக்கு பிரதான காரணமாக உள்ளது.

பொன்.முத்துராமலிங்கத்தின் கருத்தை கட்சித் தலைமை ஏற்காத நிலை வந்தால் மட்டுமே, தங்கள் கருத்தை தெரிவிக்க அமைச்சர்கள் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகள் உள்ளனர். இதில் கோ.தளபதி மட்டும் உறவினரான கவுன்சிலர் இந்திராகாந்தியின் பெயரை பரிந்துரைப்பார். மற்றவர்கள் யார் பெயரையும் வெளிப்படையாக தெரிவிக்க விரும்பவில்லை.

முதல்வர் மனதில் என்ன இருக்கிறது எனத் தெரியாமல் மேயர் விஷயத்தில் எந்தக் கருத்தையும் தெரிவித்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் அமைச்சர் பி.மூர்த்தி. இவருடன் எம்.மணிமாறன் ஒத்துப்போகிறார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது மனதில் 2 பேரை நினைத்திருந்தாலும் வெளிப்படையாக தெரிவிக்கும் நிலையில் இல்லை. அரசியல்ரீதியிலான முடிவுகளில் இவரின் கருத்தை தலைமை ஏற்குமா என்ற சந்தேகமும் உள்ளது.

இதனால் மேயர் தேர்வுக்குத் தீர்வு கிடைக்காதது மட்டுமின்றி குழப்பம் நாளுக்கு நாள் மேலும் அதிகரிக்கவே செய்கிறது. இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண மதுரை திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் விரும்பினாலும் கட்சித் தலைமை அழைக்காமல் எதையும் பேச முடியாத நிலையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x