Published : 26 Feb 2022 07:23 AM
Last Updated : 26 Feb 2022 07:23 AM
உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக அண்டை நாடுகளின் விமான நிலையங்களுக்குச் செல்ல வாகன வசதியை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என அங்கு படித்துவரும் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள மாகாணங்களில் சண்டை நடைபெற்று வருகிறது. தலைநகர் கிவ்-ல் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படித்து வரும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி தெருவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெய்சங்கரின் மகள் தீபா, உக்ரைன் நாட்டின் பால்டோவியா நகரில் மருத்துவம் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். அவரை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் தொடர்புகொண்டு பேசியபோது, ‘‘உக்ரைன் கிழக்குப் பகுதியில் நாங்கள் இருக்கிறோம். இங்கு போர் சூழல் நிலவுகிறது. ஏ.டி.எம் மையங்கள் வேலை செய்யாத தால் பணம் எடுக்க முடியவில்லை. உக்ரைனின் மேற்குப் பகுதியில் போர் பதற்றம் அதிக மாக இருப்பதால் நாங்கள் பாது காப்பாக வெளியேற முடியாத சூழல் இருக்கிறது.
ஏற்கெனவே கிவ் நகரில் இருந்து புதுடெல்லிக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். போர் காரணமாக விமான பயணம் ரத்தாகிவிட்டது. இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து பேசி வருகிறோம். நாங்கள் போலந்து, ருமேனியா நாட்டின் வழியாக பாதுகாப்பாக வெளியேற 15 மணி நேரம் சாலை பயணம் மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாட்டை இந்திய அரசு செய்து கொடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலாஜா பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஆற்காடு தோப்புக்கான பகுதியைச் சேர்ந்த சூரிய நாராயணன் ஆகியோர் உக்ரைனில் தவித்து வரும் தங்களது பிள்ளைகளை மீட்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். கணேச மூர்த்தியின் மகள் அனிதாவிடம், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் தொடர்புகொண்டு பேசும்போது, ‘‘கிவ் நகரில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள ‘ஓபிளாஸ்ட்’ நகரில் மருத்துவம் படித்து வரு கிறோம். எங்களுடன் உள்ள இந்திய மாணவர்கள் குழுக்களாக வாகனங்களில் செல்ல திட்டமிட்டு வருகின்றனர். எங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் சண்டை நடந்து வருகிறது. எங்கள் பகுதியில் இதுவரை போர் இல்லை. அவ்வப்போது போர் அபாய ஒலி எழுப்பப்படுகிறது. நாங்கள் பாதுகாப்பாக வெளியேற வாகன வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்’’ என்றார்.
இதற்கிடையில், வாலாஜா நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த குணசேகர் என்பவரின் மகள் பூஜா, உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் நிலையில் அவரை மீட்க உதவ வேண்டும் என ராணிப் பேட்டையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியிடம் முறையிட்டார். இதையடுத்து, உக்ரைனில் உள்ள மாணவி பூஜாவிடம் அமைச்சர் ஆர்.காந்தி வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பில் பேசிய துடன் தமிழக அரசின் சார்பில் நியமனம் செய்யப்பட்ட குழுவிடம் பேசுவதாகவும் தைரியமாக இருக் கும்படியும் ஆறுதல் தெரிவித்தார்.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் இருந்து உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வரும் அணைக்கட்டு வட்டம் ஆசனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராகவன், வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தீபா ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதில் அவர்கள் பாதுகாப்பாகவும் நலமுடன் இருப்ப தாக தெரிவித்தனர். அரசின் மூலம் அவர்களை இந்தியா அழைத்துவர ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
உக்ரைனில் போரினால் பாதிக் கப்பட்டுள்ள வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருந்தால் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களை 94450-08159 அல்லது 0416-2252501 அல்லது 2258159 என்ற எண்ணில் mhssec.vlr@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள மாகாணங்களில் சண்டை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT