Published : 25 Feb 2022 08:28 PM
Last Updated : 25 Feb 2022 08:28 PM
மதுரை: மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.201 கோடியே 19 லட்சத்து 98,116 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் இந்த இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை விமானநிலையம் விரிவாக்கத்திற்காக 633.17 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இதற்கான இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால் விரிவாக்கப்பணிகள் தடைப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசு அதற்கான இழப்பீட்டு தொகை ரூ.201 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரத்து 116 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் இந்த இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனீஸ் சேகர் கூறியது: "மதுரை மாவட்டம் மதுரை தெற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தாலுகாவில் விமான நிலையம் விரிவாக்கத்திற்காக அயன்பாப்பாகுடி, குசவன்குண்டு, கூடல்செங்குளம், ராமன் குளம், பாப்பானோடை மற்றும் பெருங்குடி ஆகிய கிராமங்களில் 633.17 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் கையகம் செய்யப்பட்டுள்ளது. நில உரிமைாளர்களிடம் இருந்து கையகம் செய்யப்பட்ட பட்டா நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதற்காக 29 தீர்வாணைகள் பிறப்பிக்கப்பட்டு ரூ.201 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரத்து 116 நிதி வரப்பெற்றுள்ளது.
இதில், மொத்தமுள்ள 3,069 நில உரிமையாளர்களுக்கு ரூ.155 கோடியே 15 லட்சத்து 80 ஆயிரத்து 929 இழப்பீட்டுத் தொகை மதுரை விமான நிலையம் விரிவாக்க தனி வட்டாட்சியர்களால் வழங்கப்பட்டுள்ளது. எனவே மதுரை விமானநிலையம் விரிவாக்க கையத்திற்குட்பட்ட நிலங்களின் நில உரிமையாளர்களில் இழப்பீட்டுத் தொகை இதுவரை பெறாதவர்கள் நில உரிமை தொடர்பான சான்றாவணங்களுடன் மதுரை விமானநிலையம் விரிவாக்க தனி வட்டாட்சியர் அலுவலகங்களில் இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
மதுரை விமானநிலையம் விரிவாக்கம் தனி வட்டாட்சியர் அலகு-1, அலகு-2, பழைய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகம் என்ற முகவரியில் வரும் 1 மற்றும் 2-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்று தங்கள் நிலங்களுக்கான இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.
தற்போது இழப்பீட்டு தொகை வழங்கி நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டுவிட்டதால், இனியாவது மதுரை விமான நிலையம் விரிவாக்கம் உடனடியாக தொடங்கி முடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT