Published : 25 Feb 2022 04:12 PM
Last Updated : 25 Feb 2022 04:12 PM
புதுச்சேரி: ஜிப்மரில் நோயாளிகளுக்கான இலவச மாத்திரைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வைட்டமின் தொடங்கி முக்கிய 37 மாத்திரைகள் கையிருப்பில் இல்லாத சூழல் நிலவுகிறது. அதனாலே வெளியே பணம் செலுத்தி வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் இவ்வளாகத்திலுள்ள பார்மசிகளில் கூட்டம் அலைமோதுகிறது. மாத்திரைக்கான டெண்டர் மீண்டும் வைக்கப்பட்டுள்ளதால் 15 நாட்களில் சரியாகும் என்று ஜிப்மர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைத்துள்ளது ஜிப்மர் மருத்துவமனை. மத்திய அரசின் கட்டுபாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக வெளிப்புறச் சிகிச்சைகள் தொடர்ச்சியாக தரப்படாத சூழல் நிலவியது. தொலைபேசியில் முன்பதிவு செய்து, அதன்பிறகே சிகிச்சைக்கு வரவேண்டிய நிலை இருந்தது.
தற்போதுதான் நீண்ட மாதங்களுக்கு பிறகு வெளிப்புற சிகிச்சைகள் முழுமையாக செயல்படத் தொடங்கியது. அதேபோல் இரு ஆண்டுகளாக தொற்றா நோய்களான நீரிழிவு நோய், மனநோய், இதய நோய், நரம்பியல், இதய அறுவை சிகிச்சை நோயியல், நரம்பு அறுவை சிகிச்சை நோயியல், சிறுநீரகவியல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் ஆகியவற்றுக்கு சிகிச்சையில் உள்ளோருக்கும் மாதந்தோறும் இலவசமாக தரவேண்டிய மருந்து மாத்திரைகளை ஜிப்மர் நிறுத்தியதால் பலர் பாதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் மாத்திரைகளையும் தருவதாக தெரிவித்தது. ஆனால், புதுச்சேரி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வருவோருக்கு அத்தியாவசிய மாத்திரைகள் கையிருப்பில் இல்லை என்று வெளியில் வாங்கச் சொல்கின்றனர்.
இதய நோய்க்கு விழுப்புரத்தில் இருந்து சிகிச்சைக்கு வந்த விவசாயி ஒருவர் கூறுகையில், "இதய பிரச்சினையால் சிகிச்சைக்கு வந்தேன். மாத்திரை வாங்க சென்றபோது இல்லை. அவர்கள் மாத்திரை தந்ததாக குறித்து கொள்கின்றனர். ஆனால், மாத்திரையை வெளியில் வாங்கிக்கொள்ளுமாறு கூறினர். மாத்திரை ஒரு மாதம் சாப்பிடவேண்டும். என்னால் வெளியில் வாங்கிக்கொள்ள முடியும். பலரும் மாத்திரை இல்லாததால் பணம் தந்து வாங்க வசதியில்லாமல் அப்படியே சென்றதை பார்த்தேன்" என்றார்.
ஜிப்மர் வட்டாரங்களில் விசாரித்தபோது, "மாத்திரை தட்டுப்பாடு உள்ளது. சாதாரண வைட்டமின் மாத்திரை தொடங்கி அத்தியாவசியமான 37 வகை மாத்திரை தற்போது கையிருப்பில் இல்லை. அதனால் ஜிப்மர் வளாகத்தில் பணம் செலுத்தி வாங்கும் பார்மசிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. தொற்றா நோய்களில் தொடர் சிகிச்சையில் மனநோய், புற்றுநோய் தொடங்கி பல பிரிவுகளில் ஏராளமான ஏழை நோயாளிகள் மாதந்தோறும் மருந்து வாங்க வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்" என்றனர்.
ஜிப்மர் பாதுகாப்புக்குழு தலைவர் முருகனிடம் கேட்டதற்கு, "தொற்றா நோய்களுக்கு சிகிச்சை பெறுவோர் பலருக்கும் மருத்துவர்கள் எழுதி தரும் மாத்திரைகள் ஜிப்மரில் கையிருப்பில் இல்லை. இப்பிரச்சினை தற்போது அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஒதுக்கிய நிதியை ஜிப்மர் இயக்குநர் சரியாக பயன்படுத்தவில்லை. ஆதாரபூர்வமாக விரைவில் தெரிவிப்போம்" என்று குறிப்பிட்டார்.
இதுபற்றி ஜிப்மர் மக்கள் தொடர்பு அலுவலருக்கு தொடர்பு கொண்டபோது, அவர் தொலைபேசியை எடுக்கவில்லை.
இச்சூழலில் மாத்திரைகள் ஜிப்மரில் இல்லை என்பது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதனிடம் பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து, அவர் ஜிப்மர் மருத்துவ உயர் அதிகாரிகளிடம் விசாரித்தார். அதற்கு அவர்கள் பதில் தந்தனர்.
இதுதொடர்பாக மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறுகையில், "மாத்திரைகள் கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்ததால், ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளரிடம் கேட்டேன். ஜிப்மரில் அனைத்து மாத்திரைகளும் இலவசமாக தரவேண்டும். அதுதான் நடைமுறை. கரோனாவால் மாத்திரைகளுக்கான டெண்டர் வைத்து விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் முயற்சியில் ஜிப்மர் தரப்பு உள்ளது. மீண்டும் டெண்டர் வைத்து 15 நாட்களுக்குள் இப்பிரச்சினையை சரிசெய்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார். மாத்திரைகள் விநியோகத்தில் உள்ள பிரச்சினை விரைவில் சரியாகும் என்று உறுதி தந்தார்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT