Published : 25 Feb 2022 04:01 PM
Last Updated : 25 Feb 2022 04:01 PM

மேயர், துணை மேயர் தாண்டி மதிப்பு தரும் பதவிகள்: மதுரை திமுகவில் கடும் போட்டி

பிரதிநிதித்துவப் படம்.

மதுரை: மேயர், துணை மேயர் பதவிகளைத் தாண்டி மதுரை மாநகராட்சியில் ஆதாயமும், மதிப்பும் தரும் 5 மண்டலத் தலைவர்கள், 7 நிலைக்குழு தலைவர் பதவிகளைக் கைப்பற்ற திமுக கவுன்சிலர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் 100 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள், வரும் 2ம் தேதி மாமன்ற கூட்டரங்கில் கவுன்சிலராக பொறுப்பேற்றுக் கொள்ள இருக்கின்றனர். அதற்காக மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கு புதுப்பொலிவுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கிடையில் மாநகராட்சியில் 67 வார்டுகளை தனிப்பெறும் கட்சியாக கைப்பற்றிய திமுகவில் மேயர், துணை மேயர் பதவிகளைப் பிடிக்க அக்கட்சியின் முக்கிய கவுன்சிலர்கள் தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அவரவர் ஆதரவாளர் ஒருவரை மேயர் பதவிக்கு முன்நிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், கவுன்சிலராக வெற்றிபெற்ற தனது மருமகளை மேயராக்க அமைச்சர்களை நம்பாமல் நேற்று முதல்வர் ஸ்டாலினையே நேரடியாக சந்தித்து விட்டதாக கூறப்படுகிறது.

மாநகர செயலாளர் தளபதி தனது ஆதரவு கவுன்சிலரை மேயராக்க தனியாக முயற்சி மேற்கொள்கிறார்.

இந்த நான்கு பேரில் யார் பரிந்துரை அடிப்படையில் மேயர் வேட்பாளர் கட்சித் தலைமையால் தேர்வு செய்யப்படப் போகிறார் என்று ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

மேயர், துணை மேயர் பதவிகளைத் தாண்டி, மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு ஒப்புதல் வழங்கும் ஆதாயமும் மரியாதையும், மதிப்பும் தரும் பதவிகளும் இருக்கின்றன.

5 மண்டலத் தலைவர்கள், நகரமைக்குழு தலைவர், சுகாதாரக்குழு தலைவர், நியமனக் குழு தலைவர், கல்விக்குழுத் தலைவர், கணக்கு குழுத் தலைவர், நிலைக்குழுக்குழு தலைவர், வரிவிதிப்பு குழுத் தலைவர் ஆகிய 7 குழுக்குழு தலைவர்கள் பதவிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் பதவிகள் உள்ளன. இதில், மண்டலத் தலைவர் மற்றும் பல்வேறு குழுத் தலைவர் பதவிகளைக் கைப்பற்ற திமுக கவுன்சிலர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மேயர் வேட்பாளர் யார் என்று தெரிந்த பிறகே அவர் முறைப்படி மறைமுக தேர்தலில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே மண்டலக்குழு தலைவர், பல்வேறு குழுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதனால், இந்த பதவிகளைக் கைப்பற்ற மேயர் ஆதரவும் தேவைப்படுவதால் அதற்கான முயற்சிகளில் தற்போதே திமுக கவுன்சிலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''கடந்த 5 ஆண்டுகளாக மாநகராட்சி தேர்தல் நடத்தப்படாததால் 6 ஆண்டிற்குப் பிறகு அமையப்போகிறது. இந்த பதவிகள் அனைத்துமே மதிப்பும், ஆதாயமும் தரக்கூடிய பதவிகள் என்பதால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர்கள், இக்குழுவில் இடம்பெற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஒவ்வொரு குழுவிற்கும் கவுன்சிலர்களாக இருப்பவர்களில் ஒருவர் தலைவர் மற்றும் மற்றவர்கள் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். இந்த குழுக்களில் சுகாதாரத்குழுத் தலைவர் பதவி, நியமனக்குழு தலைவர், வரிவிதிப்புக்குழு தலைவர் பதவிகள் முக்கியமானது. இந்த குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாநகராட்சியின் பல்வேறு பணிகளின் கோப்புகளை பரிசீலித்து ஒப்புதல் வழங்கும் அதிகாரம் பெற்றிருப்பர்கள். நியமனக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாநகராட்சி பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவார்கள்.

கணக்குக்குழு மாநகராட்சி வரவு, செலவு கணக்குகளை சரிபார்த்தல் மற்றும் தணிக்கை குறிப்புகளை அங்கீகரித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்வார்கள். கல்விக்குழு உறுப்பினர்கள், மாநகராட்சி பள்ளிக்கல்வித் துறைகளில் இருந்து வரும் கோப்புகளை பரிசீலிக்கும்.சுகாதாரக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாநகராட்சி பொது சுகாதாரம், தாய்சேய் நலம் உள்ளிட்ட பிரிவுகளில் செயல்படும் வாகனங்கள் பழுது பார்த்தல், வாகனம் கொள்முதல் மற்றும் கொசு மருந்து கொள்முதல் போன்றவற்றிக்கு ஒப்புதல் அளிப்பார்கள்.

அதுபோல், வரி விதிப்புக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் புதிய கட்டிடங்கள் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு, சொத்து வரி, தொழில் வரி பிற வரிகள் விதிப்பு, நில உரிமை மாற்றம் மாநகராட்சி நிலங்களை வேறு துறைகளுக்கு குத்தகைக்கு அனுமதித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நிதி நிலை கட்டுப்பாடு, வரவு, செலவு திட்டம் பரிசீலித்தல் போன்றவை மேற்கொள்ள உள்ளது.

மேலும், நிதித் தேவை குறித்து பிற நிலை குழுக்களில் இருந்து வரும் கோப்புகளை பரிசீலிக்கும். நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி குழு இக்குழு நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி குறித்து, நகரமைப்பு துறையில் இருந்து பெறப்படும் கோப்புகளை பரிசீலிக்கும். சாலைகள் மற்றும் தெருக்கள் ஆகியவற்றை அமைத்தல், பழுதுபார்த்தல், தெருவிளக்கு பராமரித்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ளும்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x