Published : 25 Feb 2022 01:30 PM
Last Updated : 25 Feb 2022 01:30 PM
சென்னை: "பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது ஏற்படும் வெடி விபத்துகள், உயிரிழப்புகள் இனியும் தொடராமல் இருப்பதற்கு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிலாளர்களின் பணிக்கு பாதுகாப்பு இருக்கும்" என்று தமிழக அரசுக்கு தமாக தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில், கட்டிடம் இடிந்ததால், அதில் சிக்கிய 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொழிலாளர்கள் வெடி மருந்து கலவையில் ஈடுபட்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்டாசு ஆலையில் அவ்வப்போது வெடி விபத்து, தீ விபத்து என ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அதாவது, எந்த அடிப்படையில், எந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டாசு ஆலை இயங்க அனுமதி வழங்கப்படுகிறதோ அது முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
எக்காரணத்திற்காகவும் பட்டாசு ஆலையில் பணியில் கவனக்குறைவும், விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமல் இருப்பதும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக தொழிலாளர்கள் பட்டாசுத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது பட்டாசுத் தயாரிக்கப் பயன்படுத்தும் மருந்து பொருளால் தீ விபத்து ஏற்படாமல் இருப்பதை ஆலை நிர்வாகம் உறுதிசெய்து கொள்ள வேண்டும். இதனை தமிழக அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி முறையாக வழங்கப்பட்டதா, அப்படியென்றால் அந்த ஆலைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகிறதா, தொழிலாளர்களின் பணிக்கு உத்தரவாதம் இருக்கிறதா ஆகியவற்றில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். பட்டாசு ஆலை நிர்வாகம் ஆலையை பாதுகாப்பாக இயக்கவும், தொழிலாளர்கள் நலன் காக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். துறையூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் உயிரிழந்திருக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் தமிழக அரசு, பட்டாசு ஆலையில், அவ்வப்போது ஏற்படும் வெடி விபத்துகள், உயிரிழப்புகள் இனியும் தொடராமல் இருப்பதற்கு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிலாளர்களின் பணிக்கு பாதுகாப்பு இருக்கும் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தமாகா சார்பில் கோரிக்கை வைக்கிறேன்" என்று ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT