Published : 25 Feb 2022 12:51 PM
Last Updated : 25 Feb 2022 12:51 PM
மதுரை: ‘‘விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் உக்ரைனில் மருத்துவம் படிக்கும் மகளை தமிழகம் திரும்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று தமிழக அரசுக்கு மதுரை அரசு மருத்துவமனை பல் மருத்துவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று போர் தொடுத்ததால் அந்நாட்டிற்கு தொழில் முறை படிப்புகளுக்காகச் சென்றுள்ள தமிழகத்தை சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். உக்ரைன் விமான நிலையங்கள் மூடப்பட்டதால் அவர்கள் தமிழகம் திரும்ப முடியாமல் உள்ளனர். இவர்களில் மருத்துவம் படிக்கும் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. உசிலம்பட்டி அருகே பெரங்காமநல்லூர் ஆதிசிவன் மகன் கபில்நாத் (21), உசிலம்பட்டி போக்குவரத்து எஸ்.ஐ., சவுந்தரபாண்டி மகன் தீபன் சக்ரவர்த்தி (23) ஆகியோர் உக்ரைனில் உள்ள கீவ், உஸ்கரோத் பகுதிகளில் மருத்துவம் படிக்கின்றனர். இவர்களை போல் இன்னும் ஏராளமான மாணவர்கள் உக்ரைனில் தவிக்கின்றனர்.
தற்போது இவர்களில் மதுரை அரசு மருத்துவமனையில் பல் மருத்துவராக பணிபுரியும் ஆலம் உசேனின் மகள் அஃப்ரின் ஃபர்ஸானா உக்ரைனில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஆலம் உசேன் தனது மகளை தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘என் மகள் உக்ரைனில் உள்ள மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இன்று தமிழகம் திரும்புவதற்கு டிக்கெட் போட்டிருந்தேன். ஆனால், இன்று அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் எப்படி மகளை அழைத்து வருவது என்பது தெரியவில்லை. ஆனால், செல்போனில் தொடர்ந்து பேச முடிகிறது.
என் மகள் படிக்கும் கல்லூரியில் மட்டுமே மதுரையைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மற்ற கல்லூரிகளையும் சேர்த்தால் இன்னும் ஏராளமானோர் படிக்கின்றனர். தமிழகம் திரும்புவதற்கு விமான டிக்கெட் போட்டிருந்தேன். என்னை போல் ஏராளமான பெற்றோர், பிள்ளைகளை வெளிநாடுகளில் படிக்க வைத்து விட்டு தற்போது இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் அவர்களை எப்படி மீட்டு வருவது என்று தெரியாமல் தவிக்கிறோம்.
அந்தப் பிள்ளைகளும் போர் சூழலில் அன்றாட சாப்பாடு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு கூட கஷ்டப்படுகின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியரும், தமிழக முதல்வரும் மத்திய அரசிடம் பேசி உக்ரைனில் படிக்கும் தமிழக மாணவர்களை விரைவாக மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT