Published : 25 Feb 2022 06:05 AM
Last Updated : 25 Feb 2022 06:05 AM

ரயில்களில் பயணச்சீட்டு எடுக்காத காவலர்கள் மீது நடவடிக்கை தேவை: தமிழக டிஜிபிக்கு தெற்கு ரயில்வே கடிதம்

சென்னை: ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையருக்கு தெற்கு ரயில்வே கடிதம் எழுதியுள்ளது.

அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது: தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் சிலர், விரைவு ரயில்கள் உட்பட பல ரயில்களில் செல்லும்போது பயணச்சீட்டு எடுப்பது இல்லை. ஆனாலும், முதலாவது, 2-வது வகுப்புகளின் முன்பதிவு பெட்டிகளில் பிற பயணிகளின் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கின்றனர். பரிசோதகர்கள் அவர்களிடம் பயணச்சீட்டு கேட்கும்போது, சம்பந்தப்பட்ட ஆவணங்களை காண்பிக்காமல் அடையாள அட்டையை காண்பித்து, தொடர்ந்து அதே இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்வதாக ரயில்வே நிர்வாகத்துக்கு அதிக அளவில் புகார்கள் வருகின்றன.

எனவே, அலுவல் ரீதியாக பயணம் மேற்கொள்ளும் காவலர்களுக்கு பயணச்சீட்டு தொடர்பான ஆவணங்களை உடனே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். உரியபயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘காவல் துறையில் வழக்கு விசாரணை, கைதிகளை அழைத்துச் செல்வதுஉள்ளிட்ட அலுவல் ரீதியான காரணங்களுக்காக பேருந்து, ரயில்,விமானத்தில் பயணிக்க போலீஸாருக்கு அனுமதி சீட்டு (பாஸ்) வழங்கப்படுகிறது. ஆனால், முன்பதிவுஇருக்கையில் அமர்ந்து பயணிக்க அனுமதி தரப்படவில்லை. உரியடிக்கெட் எடுக்காமல் பயணிப்பதும்தவறு. இதுகுறித்து தகவல்தெரிவித்தால், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x