Published : 25 Feb 2022 06:00 AM
Last Updated : 25 Feb 2022 06:00 AM
திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளில் அதிமுக 58, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 2 வார்டுகள் என 60 வார்டுகளில் போட்டியிட்டன. திமுக கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 8 வார்டுகள், காங்கிரஸுக்கு 5 வார்டுகள், மதிமுகவுக்கு 3, கொமதேகவுக்கு 2, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 என 28 வார்டுகள் கூட்டணிக்கு சென்றன.
திமுக மட்டும் 32 வார்டுகளில் போட்டியிட்டு, 23 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் 14 வார்டுகளில் வெற்றி பெற்றன.எனவே மேயர் பதவியை கைப்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுதிமுகவுக்கு தேவைப்படுகிறது.அதிகபட்சமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் திமுக தரப்பில் யார் மேயர் என்பது தொடர்பாக, அரசியல் கட்சியினர் கூறியதாவது:
திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் ஆகிய இருவர் பெயரும், திமுகவில் மேயர் பதவிக்கு அடிபடுகிறது. செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் ஆதரவு இல.பத்மநாபனுக்கும், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆதரவு தினேஷ்குமாருக்கும் உள்ளது. இருதரப்பிலும் தலைமைக்கு பெயர் பரிந்துரைக்கப்படும். அதேசமயம், திமுகவில் வடக்கு மாவட்ட பொறுப்பாளரான இல.பத்மநாபன், தனது பொறுப்புக்கு உட்பட்ட மாநகராட்சியின் 10 வார்டுகளிலும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளார். அதேசமயம், மத்திய மாவட்டத்திலுள்ள மாநகராட்சியின் 50 வார்டுகளில் 23 வார்டுகளை இழந்துள்ளது. 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இல.பத்மநாபன் மூலனூரை சேர்ந்தவர் என்றாலும், திருப்பூரில் குடிபெயர்ந்து தேர்தல் பணிகளை தொடங்கி வெற்றியும் பெற்றுள்ளார்.
இதேபோல, சில ஆண்டுகளுக்கு முன்பு தேமுதிகவில் இருந்து திமுகவுக்கு ந.தினேஷ்குமார் மாறியவர் என்றாலும், தொடர்ந்து கட்சிப் பணியாற்றுபவர். அதிமுகவில் இருந்து வந்த பலர், இன்றைக்கு திமுகவில் அமைச்சர்களாக உள்ள நிலையில், இவருக்கான வாய்ப்புகளும் உண்டு.
முன்னாள் எம்எல்ஏ-வான கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து 2010-ம் ஆண்டு திமுகவுக்கு மாறியவர். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் 46-வது வார்டில் சி.கோவிந்தசாமி பெயர் இல்லை. அதன்பின், அந்த வார்டுக்கு அறிவிக்கப்பட்ட க. ரவிமாற்றப்பட்டு, கோவிந்தசாமி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், சுயேச்சையாக க.ரவி களம் கண்டும், கோவிந்தசாமி வெற்றி பெற்றுள்ளார். மத்திய மாவட்ட பொறுப்பாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.-வுமான க.செல்வராஜின் சொந்த மைத்துனர் ரவி என்பதால், கட்சியில் பலரும் அப்போதே அதிருப்தியடைந்தனர். கோவிந்தசாமியும் மேயர் பதவி கேட்டு தலைமைக்கு அழுத்தம் தர வாய்ப்புகள் உண்டு. மூன்று பேரில் கட்சித் தலைமை யாருக்கு வாய்ப்பு அளிக்கும் என்பது சில நாட்களில் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு, திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென விரும்பினர். ஆனால், அதன்பின்னர் 8 இடங்களில் நின்று 6-ல் வென்று, திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3-ம் இடத்தை பெற்றிருப்பதால், துணை மேயர் பதவிக்கு முயற்சி செய்வதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன.
அதேசமயம், முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவைமதிப்போம் என்கின்றனர் அவர்கள் தரப்பில். இந்நிலையில், மாநகராட்சியின் 4 மண்டலத் தலைவர் பதவிகளில், கூட்டணிக்கும் வழங்க வாய்ப்புண்டு என்ற பேச்சு கட்சியினர் மத்தியில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT