Last Updated : 01 Apr, 2016 06:58 PM

 

Published : 01 Apr 2016 06:58 PM
Last Updated : 01 Apr 2016 06:58 PM

தூத்துக்குடி குடிநீர் பிரச்சினை: தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நிலவும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இப்பிரச்சினை அப்பகுதி மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த 3 ஆண்டு களாகவே கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தொடக்கத்தில் 3 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. பின்னர், குடிநீர் விநியோகம் 5 நாட்களுக்கு ஒருமுறை என்றானது.

தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான பகுதிகளில் வாரத்துக்கு ஒருமுறையும், சில பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மாநகர மக்கள் குடிநீருக்கு கடுமையாக திண்டாடி வருகின்றனர்.

நள்ளிரவில் காத்திருப்பு

மாநகரப் பகுதியில் உள்ள 8 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தலா ஒரு பொது குழாய் வைக்கப்பட்டுள்ளது. அந்த குழாயில் தண்ணீர் பிடிக்க காலிக் குடங்களுடன் ஆண்கள் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர். பல நேரங்களில் நள்ளிரவு வரை கூட காத்திருக்க வேண்டியுள்ளது.

காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்

தூத்துக்குடி மாநகராட்சி குடிநீர்ப் பிரச்சினையை தீர்ப்போம் என தேர்தல் காலங்களில வாக்குறுதியளிக்கும் அரசியல் வவாதிகள், ஆட்சிக்கு வந்ததும் அதை மறந்து விடுகின்றனர். இதனால், இப்பகுதி மக்கள் தொடர்ந்து ஏமாற்றத்துக்கு ள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி ராஜாஜி பூங்கா மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் உள்ள பொதுகுழாயில் தண்ணீர் பிடிக்க நேற்று முன்தினம் இரவு காத்திருந்த தூத்துக்குடி டூவிபுரம் பகுதியை சேர்ந்த எல்.கே. முருகேஷ் குமார் என்பவர் கூறும்போது, “வீட்டு குடிநீர் குழாய் இணைப்பில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது. எனவே, வீட்டு தேவைக்கு இங்கே வந்து தண்ணீர் பிடித்துச் செல்கிறேன்.

குடிநீர்ப் பிரச்சினையை தீர்ப்போம் என திமுகவினரும், அதிமுகவினரும் மாறி மாறி தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்றார் அவர்.

4-வது பைப் லைன் திட்டம்

தூத்துக்குடி மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 4-வது பைப்லைன் திட்டம் தொடங்கப்பட்டது. மருதூர் அணைக்கட்டு பகுதியில் இருந்து நேரடியாக தண்ணீர் கொண்டு வரும் வகையில் ரூ. 282.44 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். திட்டப்பணிகள் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பணிகள் முடிவடையவில்லை.

ஆற்றில் தண்ணீர் குறைவு

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “4-வது பைப்லைன் திட்டம் அமலுக்கு வந்துவிட்டால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது. இந்த திட்டப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த தும் இந்த திட்டம் அமலுக்கு வரும். தற்போது தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. எனவே, மாநக ராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சு கிணறுகளிலும் தண்ணீர் குறைந்து, பம்பிங் செய்யப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.

நீர் உறிஞ்சு கிணறுகள் அமைந்துள்ள பகுதிகளில் அதிக தண்ணீர் தேங்கும் வகையில், ஆற்றில் உள்ள மணல் மேடுகளை வெட்டி சரிசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன” என்றனர்.

தேர்தலில் ஒலிக்கும்

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் பிரசாரக் களத்தில் முக்கிய பிரச்சினையாக குடிநீர் தட்டுப்பாடு விவகாரம் இடம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பிரச்சினை தொடர்பாக திமுக, காங்கிரஸ், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மக்களிடையே பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடிக்க அதிமுகவும் தயாராகி வருகிறது. தூத்துக்குடி மக்களின் தாகம் தீர்க்க 4-வது பைப்லைன் திட்டத்தை தந்தது முதல்வர் ஜெயலலிதா தான் என அவர்கள் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.

மொத்தத்தில் தூத்துக்குடி தொகுதி தேர்தல் பிரச்சாரக் களத்தில் குடிநீர் பிரச்சினை அனல் பறக்கும் என்பது மட்டும் உண்மை. ஆனால், மக்கள் யார் பக்கம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x