Published : 06 Apr 2016 10:18 AM
Last Updated : 06 Apr 2016 10:18 AM
திமுக தலைவர் மு.கருணாநிதி திருவாரூரில் தங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, அவருடைய அக்காள் சண்முகத்தம்மாளின் வீட்டை தயார்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.கருணாநிதி, 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்பின்னர் தொகுதிக்கு பல முறை வந்து, பொதுமக்களையும், கட்சியினரையும் சந்தித்து தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி திருவாரூர் வந்த கருணாநிதி, செய்தியாளர்களிடம் கூறியபோது, “திருவாரூர் மக்கள் விரும்பினால் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுவேன்” என்றார்.
திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டால், கடந்த முறை பெற்றதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் விதமாக கட்சியினர் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும் என்று கடந்த வாரம் திருவாரூரில் நடைபெற்ற திமுக நகர செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் கலைவாணன் தெரிவித்திருந்தார்.
கருணாநிதி எப்போது திருவாரூருக்கு வந்தாலும் சன்னதி தெருவில் உள்ள தனது அக்காள் சண்முகத்தம்மாளின் வீட்டில் தங்குவது வழக்கம். இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால், திருவாரூரில் தங்கி பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக இந்த வீட்டைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது, வீட்டில் சில கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. வீட்டின் போர்டிகோவின் உள்பகுதி வரை கார் செல்லும்விதமாகவும், வீட்டின் முதல் மாடிக்குச் செல்வதற்கான லிப்ட் வசதி உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு நடைபெற்றுவரும் பணிகளைப் பார்க்கும்போது, திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது என்றே தெரிகிறது என கட்சிப் பிரமுகர்கள் தெரிவித்தனர்.
திருவாரூர் சன்னதி தெருவில் புதுப்பிக்கப்பட்டு வரும், திமுக தலைவர் கருணாநிதியின் அக்காள் வீடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT