Published : 25 Feb 2022 05:18 AM
Last Updated : 25 Feb 2022 05:18 AM
தி.மலை அருகே பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட் அமைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து தி.மலையில் நேற்று கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பாலியப்பட்டு ஊராட்சியில் ‘சிப்காட்’ அமைக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் சார்பில் திருவண்ணாமலையில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அறிவொளி பூங்காவில் இருந்து ஈசான்ய மைதானம் வரை சிறுவர்கள், பெண்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும் போது, “திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பாலியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலியப்பட்டு, புதிய காலணி, அருந்ததியர் பகுதி, சின்ன புனல்காடு, மாரியம்மன் நகர், அண்ணா நகர், செல்வபுரம், வாணியம்பாடி ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ளது. எங்கள் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பூ, காய்கறிகள், பழங்கள், நெல், மணிலா, கரும்பு மற்றும் சிறுதானியங்களை சாகுபடி செய்து வருகிறோம். மேலும், கால்நடைகள் வளர்ப்பின் மூலமாக மாவட்ட பொருளாதார வளர்ச்சியில் உறுதுணையாக உள்ளோம்.
இந்நிலையில், எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், கிணறுகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றை கைப்பற்றி சிப்காட் (தொழிற்பேட்டை) அமைக்க தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது. இதற்காக, வருவாய்த் துறை மூலமாக நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தையும், எங்களது வாழ்வாதாரத்தையும் அழித்து சிப்காட் கொண்டு வரும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும். இயற்கை வளங்கள், விளை நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை அழித்து கொண்டு வரப்படவுள்ள சிப்காட் எங்களுக்கு தேவையில்லை.
தொழிற்சாலை கழிவுகளில் திருவண்ணாமலை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நீராதாரம் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஐரோப்பா உட்பட பல பகுதியில் இருந்து இன பெருக்கத்துக்கு பறவைகள் வந்து செல்லும் வலசை பாதையும் பாதிக்கப்படும்.
கவுத்தி - வேடியப்பன் மலையில் உள்ள வன விலங்கள், மூலிகை தாவரங்கள் மற்றும் அங்கிருந்து நீரோடைகள் அழிந்துபோகும். பெரும் முதலாளிகளுக்காக பூர்வகுடிகளாக உள்ள கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம். அரசு மற்றும் தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT