Published : 24 Feb 2022 07:23 PM
Last Updated : 24 Feb 2022 07:23 PM

திமுகவின் வெற்றியும், அதிமுகவின் தோல்வியும் நிரந்தரமல்ல: ஆர்.பி.உதயகுமார்

மதுரை: ‘‘திமுகவின் வெற்றியும், அதிமுகவின் தோல்வியும் நிரந்தரமல்ல’’ என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு திருமங்கலம் டி.குண்ணத்தூரில் உள்ள ’அம்மா கோயில்’ நினைவிடத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியின் ஆள், அதிகார, பணபலம் ஆகியவற்றை எதிர்த்து களத்தில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பல்வேறு இடங்களில் அதிமுக வெற்றி தட்டிப் பறிக்கப்பட்டது. 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 430 பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக அதிமுக வேட்பாளர்கள் இருந்து பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். திமுக பெற்ற வெற்றி நிரந்தரமல்ல. அதிமுகவின் தோல்வி நிரந்தரம் அல்ல. ஆனால் அதிமுக எதிர்காலம் இல்லை என்று சிலர் பேசி வருகின்றனர்.

நிச்சயம் திமுகவிற்கு மூக்கணாங்கயிறு தேவைப்படும்போது அதிமுகவிற்கு மக்கள் வாக்களிப்பார்கள். தொடர்ந்து அதிமுக மக்கள் பணியாற்றும். தோல்வியைக் கண்டு நாங்கள் துவண்டுவிட மாட்டோம். தொடர்ந்து தொண்டர்கள் களப்பணி ஆற்றுவார்கள். திமுகவின் அடக்குமுறையை எல்லாம் சமாளித்து, அதிமுகவை கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்தி வருகிறார்கள்" என்றார்.

உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட ,ஒன்றிய, நகர, பேரூர் வட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க சமையல்காரர்களுடன் ஆர்.பி.உதயகுமார் தனது குடும்பத்துடன் சேர்ந்து உணவு தயாரித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x