Last Updated : 24 Feb, 2022 05:04 PM

2  

Published : 24 Feb 2022 05:04 PM
Last Updated : 24 Feb 2022 05:04 PM

அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை: கே.சி.வீரமணி நம்பிக்கை

திருப்பத்தூர்: "தமிழகத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை" என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நம்பிக்கை தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழாவை திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் இன்று கொண்டாடினர். வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.சிவீரமணி, வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல, நாட்றாம்பள்ளி ஒன்றியம், தும்பேரி, வடக்குப்பட்டு, அம்பலூர், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு கேக், இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர்; ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கே.சிவீரமணி கூறியது: "அதிமுக ஆட்சியில் மக்கள் நலன் கருதி கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக், காவிரி கூட்டு குடிநீர்த் திட்டங்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக பொய்யான வாக்குறுதிகளை தெரிவித்து மக்களை ஏமாற்றி வெற்றிப்பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. நகைக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசும்போது, தனக்கு பின்னாலும் அதிமுக 100 ஆண்டுகள் தமிழகத்தில் மக்கள் சேவை ஆற்றும் எனக் கூறினார். லட்சணக்கான தொண்டர்களை கொண்ட இயக்கம் அதிமுக. அதை யாராலும் வெல்ல முடியாது. தர்மத்தை சூது கவ்வும், இறுதியில் அந்த தர்மமே வெல்லும் என்பதை போல தமிழகத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது" என்று கே.சி.வீரமணி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x