Published : 24 Feb 2022 05:14 PM
Last Updated : 24 Feb 2022 05:14 PM

தேசிய மருத்துவ ஆணைய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு படிப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ள விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அரவிந்த் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தேசிய மருத்துவ ஆணையத்தின் 2021-ம் ஆண்டு விதிகளின் படி வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு பயின்றால், அங்குள்ள கல்லூரிகளில் 54 மாதங்கள் கல்வி பயின்றிருக்க வேண்டும். அதன்பின்னர் 12 மாதங்கள் பயிற்சியும் பெற்றிருப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவில் பதிவு செய்ய, அதற்கான தகுதி தேர்வை எழுதி, புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் 12 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகள், மொரீசியஸ் நாட்டில் மருத்துவம் படித்து மருத்துவராகும் தனது கனவிற்கு இடையூறாக உள்ளன. மொரீசியஸில் 36 மாதங்கள் மட்டுமே மருத்துவக் கல்வி வழங்கப்படுகிறது. இந்நிலையில், 54 மாதங்கள் என்பது நிர்ணயித்திருப்பதும், புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரியில் பயிற்சி பெற வேண்டும் என்பதும் இடையூறாக இருப்பதால் அந்த விதிகளை ரத்து செய்ய வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நோயாளிகளின் உயிர் காப்பது தொடர்பான படிப்பை, விரைவு படிப்பாக படிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தினர்.

நிபுணர்களின் பரிந்துரை அடிப்படையில்தான் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சட்டவிரோதம் எதுவும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளில் சமரசம் செய்ய முடியாது எனக் கூறி, மனுதாரர் அரவிந்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், மனுதாரர் மொரீசியல் கல்லூரியில் விண்ணப்பம் கூட செய்யாத நிலையில், யூகத்தின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறிய தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். அந்த தொகையை 15 நாட்களில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவிற்கு செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x