Published : 24 Feb 2022 06:48 AM
Last Updated : 24 Feb 2022 06:48 AM
கோவை: பாஜகவுடன் ஏற்பட்ட கூட்டணி முறிவால், கோவை மாநகராட்சித் தேர்தலில் 13 வார்டுகளில் அதிமுகவெற்றிவாய்ப்பை தவறவிட்டுஉள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக போட்டியிட்டது. பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் வெற்றிபெற்றார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பங்கீடு தொடர்பாக சுமுக உடன்பாடு எட்டப்படாததால், இருகட்சிகளும் தனித்தனியே தேர்தலை சந்தித்தன.
கோவை மாநகராட்சியில் 99 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 3 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்று, கடும் சரிவை சந்தித்தது. 17 வார்டுகளில் டெபாசிட்டை இழந்ததுடன், 11 வார்டுகளில் 3-ம்இடத்துக்கும், 3 வார்டுகளில் 4-ம்இடத்துக்கும் அதிமுக தள்ளப்பட்டது.
97 இடங்களில் போட்டியிட்ட பாஜக ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை. இருப்பினும் 5 வார்டுகளில் 2-ம் இடம்பிடித்தது. மாநகரில் மொத்தம் 72,393 வாக்குகளைப் பெற்றது.
எதிர்பாராத வாக்கு வித்தியாசம்
திமுக கூட்டணி மற்றும் அதிமுகவை தவிர்த்து, பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர்கட்சி, அமமுக, தேமுதிக வேட்பாளர்களும் கோவை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட்டனர். இவர்கள்தவிர ‘சீட்' கிடைக்காத அதிருப்தியில் சிலர் தங்கள் கட்சி வேட்பாளர்களையே எதிர்த்து சுயேச்சை வேட்பாளர்களாக களமிறங்கினர்.
இதனால், வாக்குகள் சிதறும் என்பதால் வாக்கு வித்தியாசம் சில ஆயிரங்களில் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றி வேட்பாளர்களுக்கும் அதிமுக வேட்பாளர்களுக்கும் இடையிலான வாக்குவித்தியாசம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது.
இதில், அதிகபட்சமாக 97-வதுவார்டில் போட்டியிட்ட திமுகவேட்பாளர் நிவேதா சேனாதிபதி, அதிமுக வேட்பாளர் சகஸ்ரநாமத்தைவிட 7,786 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். குறைந்தபட்சமாக 35-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாலசுந்தரம், திமுக வேட்பாளர் சம்பத்தைவிட 124 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்தார். அந்தவார்டில் பாஜக 355 வாக்குகளைப் பெற்றிருந்தது. ஒருவேளை அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்திருந்தால் அந்த வார்டு அதிமுக வசமாகியிருக்கும்.
பாஜகவின் வாக்கு வித்தியாசம்
இதேபோல, 6, 12, 13, 15, 28, 53,69, 71, 73, 88, 89, 91 ஆகிய 12வார்டுகளில் பாஜக பெற்ற வாக்குகள் அதிமுகவின் வெற்றியைப்பாதித்துள்ளது. இங்கெல்லாம்வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கும், அதிமுக வேட்பாளர்களுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் பாஜக பெற்ற வாக்குகளைவிட குறைவாக இருந்தது.
இரு கட்சிகளும் கூட்டணியில் இருந்திருந்தால் கூடுதலாக அதிமுக 13 வார்டுகளில் வெற்றிபெற்றிருக்க முடியும். 5 இடங்களைதிமுகவும், காங்கிரஸ் 4, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் 3, இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்தை இழந்திருக்கும்.
மதுரையில் 11 வார்டுகளில் பாஜக 2-வது இடம்
மதுரை: மதுரை மாநகராட்சித் தேர்தலில் 100 வார்டுகளில் 99 இடங்களில் பாஜக போட்டியிட்டது. இதில் 86-வது வார்டில் பாஜக வேட்பாளர் பூமா வெற்றி பெற்றார். இவர் மார்க்சிஸ்ட் வேட்பாளரைவிட கூடுதலாக 75 வாக்குகள் பெற்றார்.
84-வது வார்டில் பாஜக போட்டியிடவில்லை. 99 வார்டுகளில் ஒரு வார்டில் பாஜக வெற்றிபெற்ற நிலையில் 88 வார்டுகளில் டெபாசிட் இழந்தது. 9, 26, 44, 46, 47, 48, 52, 65, 85, 94 ஆகிய வார்டுகளில் டெபாசிட் தொகையை பாஜக திரும்ப பெற்றுள்ளது. பாஜக வேட்பாளர்கள் 11 வார்டுகளில் 2-ம் இடமும், 51 வார்டுகளில் 3-ம் இடமும், ஒரு வார்டில் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர். 18 வார்டுகளில் பாஜகவுக்கு 500-க்கும் குறைவாக ஓட்டு கிடைத்தது.
நாம் தமிழர் கட்சி 5 வார்டுகளிலும், மக்கள் நீதி மய்யம் 4 வார்டுகளிலும், அமமுக 2 வார்டுகளிலும், தேமுதிக ஒரு வார்டிலும் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT