Published : 20 Apr 2016 07:09 PM
Last Updated : 20 Apr 2016 07:09 PM
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழாவில் நேற்று முன் தினம் அரவானால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள், நேற்று அவற்றை அறுத்தெறிந்து விதவைக் கோலம் பூண்டு ஊர் திரும்பினர்
விழுப்புரம் மாவட்ட்ம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மஹாபாரத போரின் போது நடைபெறும் நிகழ்வை மையமாகக்கொண்டு சித்திரை பவுர்ணமியை ஒட்டி சித்திரை பெருவிழா 18நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இவ்விழாவிவையொட்டி மும்பை, கொல்கத்தா, டெல்லி, புனே, சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று முன் தினம் அரவான் கண் திறத்தல் நிகழ்ச்சியின் போது கோயிலுக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள், கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் தாலி, வளையல் மற்றும் படையல் பொருட்களை வாங்கி வந்து கோயிலில் சிறப்பு பூஜை செய்து பின்னர் பூசாரிகளின் கையால் தாலி கட்டிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து இரவு முழுவதும் அவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், வேண்டுதலின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் தாலி கட்டிக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரை திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். அப்போது ஏராளமான விவசாயிகள் தங்களின் நிலத்தில் விளைந்த காய்கறிகள் மற்றும் தானியங்களை சூறைவிட்டனர். தேரின் முன்பாக திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் தேரின் மீது மாலைகளையும், பூக்களையும் தூக்கி வீசியதோடு, குவியல், குவியலாக கற்பூரம் ஏற்றி, சூறை தேங்காய் உடைத்து அரவானை வழிபட்டனர்.
பின்னர் தேர் அழிகளம் நோக்கி புறப்பட்டவுன் தங்களின் கணவரை களப்பலியிட ஊர்வலமாக அழைத்துச் செல்வதாக கூறி கதறி அழுத திருநங்கைகள் அரவான் களப்பலியிட்டதை தொடர்ந்து திருநங்கைகள் கையில் இருந்த வளையலை உடைத்தும், தாலிகளை அறுத்தும், நெற்றியில் இட்ட பொட்டை அழித்தும், தலையில் வைத்திருந்த பூக்களைத் தூக்கி வீசியும் ஒப்பாரி வைத்து கதறி அழுதனர்.
பின்னர் அருகில் இருந்த கிணறுகளில் தலைமூழ்கி குளித்த திருநங்கைகள் வெள்ளாடை உடுத்தி விதவைக்கோலம் பூண்டு சோகத்துடன் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்துகொண்ட திருநங்கைகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து மாலை அரவான் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சியும், இன்று விடையாற்றியும், நாளை தர்மர் பட்டாபிஷேக விழாவும் நடைபெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT