Published : 24 Feb 2022 06:33 AM
Last Updated : 24 Feb 2022 06:33 AM

சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி: நஷ்டத்துக்குள்ளாவதால் விவசாயிகள், வியாபாரிகள் கவலை

� திருச்சி

தமிழகத்தில் விளைச்சல் அதிகரித்ததால் முதல் ரக சின்ன வெங்காயத்தின் விலை மொத்த விற்பனையில் கிலோ ரூ.25-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள வெங்காயம் விற்பனை சந்தைகளில் திருச்சி முக்கிய இடம் வகிக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சின்ன வெங்காயமும், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பெரிய வெங்காயமும் தினமும் 300 டன் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கடந்த வாரத்தில் மொத்த விற்பனையில் கிலோ ரூ.60-ஆக இருந்த சின்ன வெங்காயத்தின் விலை நேற்று கிலோ ரூ.25-க்கு குறைந்து விட்டது. இதனால், வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் மற்றும் அதிக விலைக்கு கொள்முதல் செய்த வியாபாரிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தகர் சங்கச் செயலாளர் ஏ.தங்கராஜூ ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:

சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விற்பனையில் முக்கிய சந்தையாக திருச்சி விளங்குகிறது.

கடந்த 2 நாட்களுக்கு மேலாக சின்ன வெங்காயம் வரத்து அதிகமாக உள்ளதால், கடந்த வாரம் மொத்த விற்பனையில் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட முதல் ரக சின்ன வெங்காயம் நேற்று கிலோ ரூ.25-ஆக குறைந்து விட்டது. மொத்த விற்பனையில் ரகத்துக்கு ஏற்ப கிலோ ரூ.15 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக தினந்தோறும் ஏறத்தாழ 200 டன்னுக்கு மேல் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. ஆனால், விலை குறைந்து விட்டதால், ஏற்கெனவே அதிக விலை கொடுத்து வெங்காயம் வாங்கிய வியாபாரிகள் தற்போது பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுவதும் குறைந்துவிட்டதால், வெங்காய மண்டிகளில் வெங்காயம் தேங்கி, அழுகி வீணாகி வருகிறது என்றார்.

இதுகுறித்து திருச்சி மாவட்டம் கோம்பைபுத்தூரைச் சேர்ந்த விவசாயி கே.எம்.ராஜேந்திரன் கூறியது:

2 மாதங்களுக்கு முன்னர் நல்ல மழை பெய்ததால், விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இவை அறுவடை செய்யப்படுகின்றன. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பட்டறை போடப்பட்ட வெங்காயமும் தற்போது விற்பனைக்கு வருவதால், முதல் ரக வெங்காயம் கிலோ ரூ.25-ஆக குறைந்து விட்டது.

ஏற்கெனவே இடுபொருட்கள், உழவு இயந்திர வாடகை, கூலி ஆகியவை உயர்ந்து விட்டதால், ஒரு கிலோ வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை செய்தால் தான் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.10 லாபம் கிடைக்கும். ஆனால், தற்போது சாகுபடிக்கு செய்த செலவு கூட கிடைக்காமல் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x