Published : 24 Feb 2022 05:26 AM
Last Updated : 24 Feb 2022 05:26 AM
வேலூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட அதிமுக 25 வார்டுகளிலும், பாஜக 31 வார்டுகளிலும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். இதில், அதிமுகவின் டொசிட்இழப்பு எண்ணிக்கை அக்கட்சி யினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தலில் 7, 8-வது வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் சுனில்குமார், புஷ்பலதா வன்னியராஜா போட்டியின்றி வெற்றி பெற்றனர். இதனால், 58 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 53 வார்டுகளிலும் காங்கிரஸ் 2 வார்டுகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக தலா ஓரிடத்தில் போட்டியிட்டனர்.
அதிமுகவும் கூட்டணி கட்சியினரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். இதில், 4 வார்டுகளில் அதிமுகவினரின் மனுக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம், மாநகராட்சி தேர்தலில் ஆரம்பத்திலேயே அதிர்ச் சியை ஏற்படுத்தியது. 56 வார்டுகளில் அதிமுக போட்டியிட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக 35 வார்டுகளில் போட்டியிட்டது.
கடந்த 2011-ல் நடைபெற்ற வேலூர் மாநகராட்சிக்கான முதல் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையுடன் மாநகராட்சியை கைப்பற்றியது. ஆனால், நடந்து முடிந்த தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வேலூர் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் திமுக 43, விசிக 1, பாஜக 1, பாமக 1, சுயேச்சைகள் 6 என்ற கணக்கில் வெற்றிபெற அதிமுகவின் வெற்றி மட்டும் 7 என்ற ஒற்றை இலக்கத்தில் சுருங்கிவிட்டது.
அதிமுகவின் வெற்றி ஒரு பக்கம் சுருங்கிவிட்டாலும் 25 வார்டுகளில் டெபாசிட் தொகையை இழந்துவிட்டது என்ற தகவல் அக்கட்சியினரால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த தோல்விக்கு கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சிலரும் காரணம் என்ற குற்றச்சாட்டு அக்கட்சியினர் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முடிவு இருந்தாலும் அதிமுகவின் போர்க்குணத்தை இந்த தேர்தலில் காட்ட முடியவில்லை. தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்த வியூகம் இல்லாமல் ஆளும் திமுகவை எதிர்கொண்டோம்.
மனுத்தாக்கலில் 4 வேட்பாளர் களின் மனு தள்ளுபடி செய்யப் பட்டதே எங்களுக்கு பின்னடைவு. இதில், மற்ற வேட்பாளர்களுடன் ரகசிய கூட்டணி அமைத்ததை கண்காணிக்கவில்லை. தோல்விக்கான காரணத்தை உரியவர்கள் சொல்ல வேண்டும்’ என்றார் தோல்வியுற்ற அதிமுக வேட்பாளர் ஒருவர்.
அதேபோல், மாநகராட்சியில் 35 வார்டுகளில் போட்டியிட்டு ஒரே ஒரு வார்டில் வெற்றிபெற்ற நிலையில் 31 வார்டுகளில் டெபாசிட் தொகையை பாஜகவினர் இழந்துள்ளனர். இதுகுறித்து அக்கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘இளைஞர்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. மோடி, அண்ணாமலை தலைமையை விரும்புகின்றனர். டெபாசிட் இழந்த சுமார் 15 வார்டுகளில் சிறுபான்மையினர் வாக்குகள் இருப்பதால் தோல்வியை தழுவியுள்ளோம். இருந்தாலும் பணத்தை கொடுக்காமல் பாஜகவின் வாக்குகள் விழுந்துள்ளது’’ என தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சியில் டெபாசிட் இழந்த கட்சிகளின் பட்டியலில் நாம் தமிழர் கட்சிக்கு 37 வார்டுகளிலும், பாமக மற்றும் அமமுகவுக்கு தலா 17 வார்டுகளிலும் நகர்ப்புற வாக்காளர்களை கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 10 வார்டுகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT