Published : 23 Feb 2022 08:16 PM
Last Updated : 23 Feb 2022 08:16 PM
வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த பெண் வேட்பாளர் தனது தோல்வியை கேக் வெட்டி கொண்டாடி, தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு வீடு, வீடாகச் சென்று கேக் வழங்கி தனது நன்றியை தெரிவித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகளில் திமுக, அதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஒவைசி கட்சி உள்ளிட்ட கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர். ஒரு சில வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது உள்ளூர் செல்வாக்கை வைத்து தேர்தலில் போட்டியிட்டனர்.
இந்நிலையில், 29-வது வார்டில் திமுக சார்பில் சுபாஷினி என்பவரும், அதிமுக சார்பில் பிரியங்கா என்பவரும் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து சீதாலட்சுமி வடிவேல் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டார். இதனால், 29-வது வார்டில் மும்முனை போட்டி ஏற்பட்டது.
தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த வார்டில் 2,948 வாக்குகள் உள்ளன. இதில், 1,724 வாக்குகள் மட்டுமே பதிவானது. அதன்படி, திமுக வேட்பாளர் சுபாஷினி 1,226 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பிரியங்கா 268 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். சுயேச்சையாக போட்டியிட்ட சீதாலட்சுமி வடிவேல் 230 வாக்குகள் பெற்று 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
தேர்தலில் தோல்வியடைந்தாலும் மனம் தளராத சீதாலட்சுமி தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க முடிவு செய்து, தனது வீட்டில் 5 கிலோ எடையுள்ள கேக் ஒன்றை வெட்டினார். அந்த கேக்கில் ‘நேர்மையான வாக்குகளுக்கு நன்றி’ என எழுதி அதை பொதுமக்கள் முன்னிலையில் வெட்டினார்.
பிறகு, வெட்டிய கேக் துண்டுகளை எடுத்துக்கொண்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வீடு, வீடாகச் சென்றார். ”திமுக, அதிமுக வேட்பாளர்கள் பல ஆயிரம் செலவழித்து தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால், ஒரு வாக்குக்கும் பணம் கொடுக்காமல் நான் 230 வாக்குகள் பெற்றுள்ளதால் இதுவே எனக்கு பெரிய அங்கீகாரம்” என மகிழ்ச்சியுடன் கூறி தன் நன்றியை வாக்காளர்களுக்கு தெரிவித்தார். இதைக் கண்ட பொதுமக்கள் தேர்தலில் வெற்றிப்பெற்றவரே நன்றி தெரிவிக்க வராதபோது தோல்வியடைந்த வேட்பாளர் கேக்குடன் வீடு தேடி வந்த நன்றி தெரிவித்த சம்பவத்தால் நெகிழ்ச்சியடைந்தனர்.
இது குறித்து சீதாலட்சுமியின் கணவர் வடிவேல் கூறும்போது, ‘இந்த தேர்தல் எங்களுக்கு முதல் வாய்ப்பு, பணம் இருந்தால்தான் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்ற எண்ணத்தை நாங்கள் தவிடுபொடியாக்கியுள்ளோம். வாக்கு சேகரிக்கும்போதே நாங்கள் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம், வெற்றி பெற்றால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம், 29-வது வார்டை வாணியம்பாடி நகராட்சியின் முதன்மை வார்டாக மாற்றுவோம் எனக் கூறிதான் வாக்கு சேகரித்தோம்.
திமுக, அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற மாறி, மாறி பணம் கொடுத்தனர். ஆனால் நாங்கள் ஒரு பைசா கூட வழங்கவில்லை. அதை மக்கள் அதிகம் விரும்பினர். இதன் வெளிப்பாடுதான் 230 வாக்குகள் நாங்கள் பெற்றோம். நேர்மையான அரசியலை மக்கள் விரும்புகின்றனர். அதையே நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம். அதில் எங்களுக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. அரசியலில் ஈடுபட இளைஞர்கள் முன்வர வேண்டும். விலை போகாத மக்களின் வாக்குகளை பெற இளைஞர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைபாடு’’ என்றார்.
‘தோத்தாலும், ஜெயிச்சாலும் மீசையை முறுக்கு’ என்ற தமிழ் சினிமா பட பாணியில் தேர்லில் தோல்வியடைந்த சுயேச்சை வேட்பாளர் சீதாலட்சமி தன் கணவர் வடிவேலுடன் வீடு, வீடாக சென்று கேக் வழங்கி நன்றி தெரிவித்து வரும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...