Published : 23 Feb 2022 07:37 PM
Last Updated : 23 Feb 2022 07:37 PM

தமிழகம் முழுவதும் பிப்.27-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்.27) 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போலியோ சொட்டு மருந்து முகாம் 27.02.20220 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும். தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும். இம்மையங்களில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.

முக்கிய அம்சங்கள்

> சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

> 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 27.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

> போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற தகுந்த கரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.

> சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கை கழுவதல் கட்டாயமாகும்.

> தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவது /Sanitizer உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.

> பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல்/இருமல் அல்லது மற்ற தொற்று கரோனா தொடர்பாக இருந்தால் மையங்களுக்கு அனுமதிக்கக் கூடாது.

> மையங்களில் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். சொட்டு மருந்து கொடுக்கும் குழந்தைகளுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

> தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

> அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

> விடுபடும் குழந்தைகளை கண்டறிய, சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

> முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

> புலம் பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

> போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.

> போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயணவழி மையங்கள் (Transit Booths) கரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றி சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

> நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

> போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

> போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழகம் தொடர்ந்து 18 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x