Last Updated : 23 Feb, 2022 05:57 PM

31  

Published : 23 Feb 2022 05:57 PM
Last Updated : 23 Feb 2022 05:57 PM

எதை அழுத்தினாலும் பாஜகவிற்கு விழும் ஓட்டுகள்: லக்கிம்பூர்கேரி வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் குளறுபடி

வாக்கு இயந்திரம் கோளாறு காரணமாக லக்கிம்பூர்கேரியின் துணை ஆட்சியர் டாக்டர் ராகேஷ் வர்மா நேரில் வந்து விசாரணை.

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர்கேரி வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் குளறுபடி ஆனதால், எதை அழுத்தினாலும் பாஜகவிற்கு ஓட்டுகள் விழுந்துள்ளன. பின்னர், அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் நான்காவது கட்ட தேர்தலில் லக்கிம்பூர்கேரியின் தொகுதி வாக்குச்சாவடியில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் பாஜகவிற்கு ஓட்டுகள் விழுந்துள்ளன. இதைக் கண்டுபிடித்து சரிசெய்ததால் சுமார் இரண்டு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

பிப்ரவரி 10-இல் தொடங்கி உத்தரப் பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதில், இன்று நான்காவது கட்ட வாக்குபதிவு மத்திய மற்றும் கிழக்குப் பகுதி உத்தரப் பிரதேசத்தின் 9 மாவட்டங்களின் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெற்ற முக்கியத் தொகுதிகளாக லக்கிம்பூர்கேரியில் எட்டு தொகுதிகள் உள்ளன. இதற்கு அங்கு விவசாயிகள் போராட்டத்தின்போது வாகனங்கள் ஏற்றி பலியான ஐந்து பேர் உயிர்கள் காரணமாயின.

இதன் மீதான வழக்கில் உத்தரப் பிரதேச மாநில பாஜகவின் தலைவரும் மத்திய உள்துறை இணை அமைச்சருமான அஜய்குமார் மிஸ்ரா டேனியின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சிக்கியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு தேர்தலுக்கு சற்று முன்னதாக ஜாமீன் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை 7.00 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவில் லக்கிம்பூர்கேரியின் நகர தொகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் ஒரு புகார் கிளம்பியிருந்தது. இந்த வாக்குச்சாவடி எண் 85, பர்தான் காவல்நிலையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள வாக்கு இயந்திரத்தில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் அதில் பாஜகவிற்கான வாக்காகி விடுவதாகத் தெரிந்தது. இது, அந்த வாக்கு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டுகளில் தாமரை சின்னத்துடன் வெளியானதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த வாக்குச்சாவடி அலுவலர்களால் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு புகார் அளிக்கப்பட்டது. இதற்காக லக்கிம்பூர்கேரியின் துணை ஆட்சியர் டாக்டர் ராகேஷ் வர்மா நேரில் வந்து விசாரணை செய்திருந்தார். பிறகு வாக்கு இயந்திரம் கோளாறாக இருப்பதை உறுதிசெய்தமையால், வேறு இயந்திரம் அளிக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்தது. இதனால், சுமார் இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு காலை 8.55 மணிக்கு மீண்டும் தொடங்கியது.

இதே நகர தொகுதியின் படிபுர்ஸானி கிராமத்து வாக்குச்சாவடியிலும் ஒரு புகார் கிளம்பியிருந்தது. இங்குள்ள வாக்கு இயந்திரத்தின் மீது வாக்களிக்க வந்தவர், பெவிகுயிக் எனும் பசையை ஒட்டிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளியை சிசிடி உதவியால் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தாலும் படிபுர்ஸானி வாக்குச்சாவடியில் சுமார் 20 நிமிடங்கள் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மதியம் மூன்று மணி வரையில் லக்கிம்பூர்கேரியின் வாக்குச்சாவடிகளில் 52.98 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இது கடந்த தேர்தல்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ளதாக தெரிந்துள்ளது. கடந்த 2017 தேர்தலில் லக்கிம்பூர்கேரி மாவட்டத்தின் எட்டுத் தொகுதிகளும் பாஜகவின் வசம் சென்றிருந்தன. இந்தமுறை விவசாயிகள் பலியான சம்பவத்தால் பாஜகவின் வெற்றி, சிக்கலுக்கு உள்ளாகிவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x