Published : 23 Feb 2022 12:46 PM
Last Updated : 23 Feb 2022 12:46 PM

மாற்று சக்திகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது: கமல்ஹாசன்

கோப்புப் படம்

சென்னை: எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் என நான்காண்டுகளுக்கு முன் நான் அறிவித்தது வெறும் வாய்ஜாலம் இல்லை, இடைக்கால வெற்றி தோல்விகள் எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை. மாற்று சக்திகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான்.

நேர்மையாக தேர்தலை எதிர்கொண்ட வேட்பாளர்களுக்கும், அவர்களுக்காக உழைத்த கட்சியின் உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் போட்டியிட்ட வார்டுகளில் நீங்கள் வென்றதாகவே நினைத்து மக்கள் பணியைத் தொடருங்கள். உங்களை வெற்றி பெறச் செய்யாததை நினைத்து வருந்துமளவிற்குச் சேவையாற்றுங்கள். நாம் அரசியலுக்கு வந்தது மக்கள் பணி செய்வதற்குத்தான். வெள்ளிக் கொலுசு, ஹாட் பாக்ஸ், அண்டா, பட்டுப் புடவை, ரூ.2,000 முதல் ரூ.8,000 வரை பணம் என வாக்காளர்கள் விலை பேசப்பட்டபோதும் தன் ஆன்மாவை அடகு வைக்காமல் நேர்மைக்கு வாக்களித்த வாக்காளர்களின் நெஞ்சுரம் போற்றுதலுக்குரியது. அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள போதிய நிதி இல்லாமல் தடுமாறியபோது நேர்மை அரசியலுக்கு இயன்றதைத் தாருங்களென மக்களிடமே கோரிக்கை விடுத்தோம். தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்தவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. தோல்விகள் இரண்டு வகைப்படும். ஒன்று permanent failure. திருத்திக்கொள்ள வாய்ப்பில்லாதவை.

மற்றொன்று micro failure. திருத்திக்கொண்டு வெற்றியை நோக்கி முன்னகரும் வாய்ப்புள்ளவை. நாம் சந்தித்திருக்கும் பின்னடைவு இரண்டாம் வகை. பல இடங்களில் 50% குறைவான வாக்காளர்களே தங்களது வாக்குகளைச் செலுத்தி இருக்கிறார்கள். கழகங்கள் போட்ட கள்ள ஓட்டுகளைக் கழித்தால், இன்னமும் கூட குறைவான சதவீத மக்களே இந்தத் தேர்தலில் பங்கேற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் நிகழும் ஆபாச அரசியலை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்பதையே இது சுட்டுகிறது. நாம் பேச வேண்டியது அவர்களிடம்தான்.

இந்தச் சூழலை மாற்றவே முடியாது என சோர்ந்து போனவர்களும், அரசியல் நமக்குச் சொந்தமானதில்லை என ஒதுங்கிக்கொள்ளும் இளைஞர்களும் மனம் மாறி தங்களது ஜனநாயகப் பங்களிப்பைச் செய்கையில் சூழல் மாறும்.

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் என்பது ஒரு சம்பிரதாயமான வார்த்தை. அதை நான் சொல்ல விரும்பவில்லை. மக்களும் பல சமயங்களில் கூட்டாகச் சேர்ந்து தவறான முடிவுகளை எடுப்பார்கள். வரலாறு நெடுக அதற்கு உதாரணங்கள் உண்டு. எங்களைப் போன்ற நேர்மையாளர்களை, அரசியலை பணம் குவிக்கும் தொழில்வாய்ப்பாகக் கருதாதவர்களை, வாக்குறுதி தந்துவிட்டு ஏமாற்றாதவர்களை, ஊழலற்ற வெளிப்படையான திறமையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தைச் சீரமைக்க நினைப்பவர்களைத் தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை.

நீங்கள் யாரை, எதற்காகத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை உங்களின் அடுத்த தலைமுறை கவனித்துக் கொண்டிருக்கிறது. எங்களைப் போன்ற மாற்று சக்திகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. கடமையில் தவறியவர்கள் உரிமையை இழப்பார்கள் என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் துரதிர்ஷ்டமான உண்மை.

என் எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் என நான்காண்டுகளுக்கு முன் நான் அறிவித்தது வெறும் வாய்ஜாலம் இல்லை. இடைக்கால வெற்றி தோல்விகள் எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அதற்கு விதிவிலக்கல்ல."

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x