Published : 23 Feb 2022 05:37 AM
Last Updated : 23 Feb 2022 05:37 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ள நிலையில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.
தி.மலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 123 பதவிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் 150 பதவிகள் என மொத்தம் 273 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், போளூர் பேரூராட்சி 5-வது வார்டில் போட்டியின்றி திமுக வென்றதால், 272 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த பதவிகளை கைப்பற்ற 1,214 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதையடுத்து, 454 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 8 மையங்களில் நேற்று நடைபெற்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கீதா, ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். காலை 9 மணி முதல் முடிவுகள் வெளியானது. இதில், புதுப்பாளையம், போளூர், களம்பூர், கண்ணமங்கலம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், தேசூர் ஆகிய 9 பேரூராட்சிகள் மற்றும் திருவண்ணாமலை, ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு) ஆகிய 3 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. செங்கம் பேரூராட்சி மற்றும் வந்தவாசி பேரூராட்சியில் இழுபறி நீடிக்கிறது.
14 நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் அதிமுக படுதோல்வியை சந்தித் துள்ளது. பெரணமல்லூர் பேரூராட்சியில் அமமுக மற்றும் தேமுதிக தலா ஒரு இடத்திலும், செங்கம் பேரூராட்சியில் பாஜக ஒரு இடத்திலும் வென்றுள்ளது, அக்கட்சியினரை ஆறுதல் அடைய செய்துள்ளது. நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.
தி.மலை நகராட்சி யில் உள்ள 39 வார்டில் 31 வார்டுகளில் திமுகவும், 6 வார்டுகளில் அதிமுகவும், 2 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளன. இதேபோல், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் உள்ள 27 வார்டில் 18 வார்டுகளில் திமுகவும், 3 வார்டுகளில் அதிமுகவும், 2 வார்டுகளில் பாமகவும், 3 வார்டுகளில் சுயேச்சைகளும் மற்றும் ஒரு வார்டில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன. பெரும்பான்மை யான இடங்களில் வென்றுள்ளதால் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
இதேபோல், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆரணி நகராட்சியையும் திமுக கைப்பற்றி உள்ளது. ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 12 வார்டுகளில் திமுகவும், 2 வார்டுகளில் காங்கிரஸ், 2 வார்டு களில் மதிமுக, ஒரு வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி பலத்துடன் பெரும்பான்மைக்கு தேவையான 17 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால், ஆரணி நகராட்சியையும் கைப்பற்றி யுள்ளது.
வந்தவாசி, செங்கத்தில் இழுபறி
வந்தவாசி நகராட்சியில் திமுக உள்ளிட்ட கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காத சிலரும் சுயேச்சையாக களம் கண்டனர். மொத்தம் உள்ள 24 வார்டில் 10 வார்டுகளை சுயேச்சைகள் கைப்பற்றியுள்ளனர். 8 வார்டுகளில் திமுகவும், 3 வார்டுகளில் அதிமுகவும், ஒரு வார்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும், 2 வார்டுகளில் பாமகவும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 13 இடங்கள் தேவைப்படுகிறது. கூட்டணி பலத்துடன் 9 இடங்களை வைத்து திமுகவுக்கு மேலும் 4 இடங்கள் தேவைப்படுகிறது. இதனால், சுயேச்சை வேட்பாளர்களை அரவணைக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், அதிமுக ஒதுங்கி கொண்டது.
இதேபோல், செங்கம் பேரூராட்சி யிலும் இழுபறி நீடிக்கிறது. மொத்தம் உள்ள 18 வார்டுகளில், திமுக 8 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன் தோழமை கட்சியான மனித நேய மக்கள் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், அதிமுக 7 வார்டுகளிலும், பாமக மற்றும் பாஜக தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை என்பதால், இழுபறி தொடர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT