எத்தனை இன்னல்கள் வந்தாலும் அதிமுக மக்கள் பணியைத் தொடரும்: எடப்பாடி பழனிசாமி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: "எத்தனை இன்னல்கள் வந்தாலும் அதிமுக தொடர்ந்து மக்கள் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பாடுபடும்" என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாற்று அணியினரின் பல்வேறு வகையிலான முயற்சிகளுக்கு மயங்கிவிடாமல், அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற தெளிவான சிந்தனையுடன், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்திருக்கும் வாக்காளப் பெருமக்களின் அன்பும், ஆதரவும், கழகத்தின் எதிர்கால வெற்றிக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. கழகத்திற்கு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வணக்கமும், நன்றியும் உரித்தாகுக.

எந்த வகையான சஞ்சலத்திற்கும், சபலத்திற்கும் இடம் தராமல், கொண்ட கொள்கைக்காகவும், கழகத்தின் வெற்றிக்காகவும் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி உழைத்த கழக நிர்வாகிகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும்; கழகத்திற்கு ஆதரவு அளித்த தோழமை இயக்கங்களுக்கும் மற்றும் நட்பு அமைப்புகளுக்கும் நன்றி கூறுகிறேன்.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய பதவிகளுக்கு செல்கின்ற கட்சி நிர்வாகிகளுக்கு நல்வாழ்த்துகள். மக்களின் பிரதிநிதிகளாகப் பணியாற்ற இருக்கும் நீங்கள் அனைவரும் கழகத்தின் கொள்கைகளை மனதிற்கொண்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் விதத்தில் சிறப்பாகப் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதிமுக என்றென்றும் மக்களுக்கான இயக்கம். குறிப்பாக எளிய மக்களுக்காகவும், அரசியல் அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் பங்கு பெற்றிராத சாமானிய மக்களுக்காக அயராது பாடுபடும் எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆகியோரின் இயக்கம். எத்தனை இன்னல்கள், இடர்ப்பாடுகள், அச்சுறுத்தல்கள் வந்தாலும் அஞ்சாது மக்கள் பணியாற்றும் அதிமுக தொடர்ந்து மக்கள் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பாடுபடும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in