Published : 22 Feb 2022 04:02 PM
Last Updated : 22 Feb 2022 04:02 PM
கும்பகோணம்: 156 ஆண்டுகள் பழமையான, தரம் உயர்த்தப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியில் முதல் மாநகர மேயர் பதவியை திமுக கைப்பற்றியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன்மையான ஊராகத் திகழ்வது கும்பகோணம். 1866-ம் ஆண்டு நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது.
இதையடுத்து 1949-ம் ஆண்டில் முதல்நிலை நகராட்சியாகவும், 1974-ம் ஆண்டில் தேர்வு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 16.10.2021 அன்று கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியாக இருந்தபோது கும்பகோணத்தில் 45 வார்டுகள் இருந்தன, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும் 48 வார்டுகளாக விரிவுபடுத்தப்பட்டது.
இதையடுத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும், முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் இன்று கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் எண்ணப்பட்டன.
இதில், திமுக 39 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மனித நேயமக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு இடங்கள் என திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டன. மேலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரு இடங்களிலும் போட்டியிட்டன. அதேபோல் அதிமுக 47 இடங்களிலும், தமாகா ஒரு இடத்திலும் போட்டியிட்டன.
தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் திமுக 37 வார்டுகளில் வெற்றி பெற்றது. மேலும் காங்கிரஸ் 2, சிபிஎம் 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, விடுதலை சிறுத்தைகள் 1 என திமுக கூட்டணி 42 இடங்களைக் கைப்பற்றியது.
அதே போல் அதிமுக மூன்று இடங்களில் வெற்றி பெற்றது. மூன்று இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், முதல் மேயர் பதவியைப் பிடிக்க திமுக-அதிமுக என இரு கட்சிகளும் பரபரப்பாக தேர்தலில் பணியாற்றி வந்த நிலையில், திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று மேயர் பதவியைக் கைப்பற்றியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT