Published : 22 Feb 2022 02:11 PM
Last Updated : 22 Feb 2022 02:11 PM
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மதியம் 1 மணி நிலவரப்படி 21 மாநகராட்சிகளும் திமுக வசமாகியுள்ளன.
இதில் மிகவும் சுவாரஸ்யமானது, நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட 21 வயதான இளம்பெண் கவுசிகா வெற்றி பெற்றுள்ளார். நாகர்கோவில் பல ஆண்டுகளாக நகராட்சியாக இருந்து வந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதன்முறையாக நடந்துள்ள மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலில் இளம் பெண் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல், ஓசூர் மாநகராட்சி 13 வது வார்டில் திமுக வேட்பாளராக களமிறங்கிய 22 வயது சட்டக் கல்லூரி மாணவி யஷாஸ்வினி வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு மண்டலத்தைப் போலவே மதுரை, நெல்லை, நாகர்கோவில், சிவகாசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி போன்ற தென் மண்டலத்திலும் மாநகராட்சித் தேர்தலில் திமுக தனது ஆதிக்கத்தை அழுத்தமாக பதித்து அதிமுகவின் கோட்டையை அசைத்துப் பார்த்துள்ளது. தென் மண்டலத்தைப் பொறுத்தவரை 85% இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த சதவீதம் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நகராட்சிகளைப் பொறுத்தவரை 138 இடங்களிலுமே முன்னிலை நிலவரம் வெளியாகிவிட்டது. இதில் 129 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதிமுக வெறும் 5 இடங்களிலும், பிற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. புளியங்குடி நகராட்சி, அருப்புக்கோட்டை நகராட்சி என அதிமுகவின் ஆதிக்கம் நிறைந்த நகராட்சிகள் எல்லாம் திமுக வசம் சென்றுள்ளன.
பத்மநாபபுரம் நகராட்சி யாருக்கு? - நாகர்கோவிலில் உள்ள பத்மநாபபுரம் நகராட்சியை பாஜக குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. இங்கு திமுக 7 இடங்களிலும் பாஜக 7 இடங்களிலும் சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போது நகராட்சியை கைப்பற்றுவதில், சுயேச்சை ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
489 பேரூராட்சிகளில் 434 பேரூராட்சிகளில் முடிவுகள் வெளியாகியுள்ளன. 367 பேரூராட்சிகளை திமுக அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளன. அதிமுக 25, அமமுக ஒரு பேரூராட்சியையும் பிற கட்சிகள் 25 பேரூராட்சிகளையும் கைப்பற்றியுள்ளன.
என்னவாயிற்று நாம் தமிழர், மநீமவுக்கு? - சீமானின் நாம் தமிழர் கட்சியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியும் மாநகராட்சித் தேர்தலில் கணக்கே தொடங்கவில்லை. நாம் தமிழர் கட்சிக்கு ஆறுதல் வெற்றி என்று சொல்லும் அளவுக்கு இரணியல் பேரூராட்சியில் மட்டும் நாம் தமிழர் வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். நகராட்சித் தேர்தலிலும் பெரும்பாலும் அதே நிலைதான் நிலவுகிறது. குறிப்பாக சிவகங்கை நகராட்சியில் உள்ள 1-வது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செங்கோல் ஒரு வாக்கு கூட பெறாதது சர்ச்சையாகியுள்ளது. செங்கோல் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாக்காவது விழுந்திருக்க வேண்டுமே என்ற சலசலப்பு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT