Published : 22 Feb 2022 01:52 PM
Last Updated : 22 Feb 2022 01:52 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 50 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
திமுக கூட்டணி வெற்றி: தூத்துக்குடி மாநராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் 44 வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 3 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூ. மற்றும் இந்திய கம்யூ. கட்சிகள் தலா ஒரு வார்டிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.
இதன்மூலம் 60 வார்டுகளைக் கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 50 வார்டுகளில் வெற்றி பெற்று, தூத்துக்குடி மாநகராட்சியை தங்களது வசமாக்கினர். இத்தேர்தலில் 10, 35, 51, 52, 57 மற்றும் 59 உட்பட 6 வார்டுகளில் வெற்றி பெற்றன.
மேலும், 2, 14, 37 மற்றும் 44 உட்பட 4 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக கருதப்படும் அமைச்சர் கீதாஜீவனின் சகோதரர் ஜெகன் பெரியசாமி 20- வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார்.
இதே போல், தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அதிமுக 13 வார்டுகளில் வெற்றி பெற்றது. அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் மகள் புவனேஸ்வரி 3-வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார். கழுகுமலை பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
நாசரேத் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 18 வார்டுகளில், திமுக 11 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், அதிமுக ஒரு வார்டிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
முதல்முறையாக தேர்தலை சந்திக்கும் திருச்செந்தூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் சுயேச்சைகள் மூன்று இடங்களிலும், அதிமுக இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் அங்கு வெற்றி பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT