Published : 22 Feb 2022 05:29 AM
Last Updated : 22 Feb 2022 05:29 AM
ஆர். புதுப்பட்டினம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், முஸ்லிம் மக்கள் சீர்வரிசை வழங்கியது மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக அமைந்தது.
ஆர்.புதுப்பட்டினம் வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா பிப்.17-ல் கணபதி ஹோமம், யாக சாலைபூஜைகளுடன் தொடங்கி நடைபெற்றன. நேற்று 6-ம் காலயாகசாலை பூஜைக்குப் பின்பு மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி மற்றும் சித்தி விநாயகர், மகாலட்சுமி, இடும்பன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு, ஆர்.புதுப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தைச் சேர்ந்தோர் நேற்று முன்தினம் இரவு குதிரையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோயிலுக்கு தேங்காய்,பழ வகைகள், பூக்கள், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களை கொண்டு வந்தனர்.
அவர்களை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் வரவேற்று, கோயிலில் அமரச்செய்துஉபசரித்தனர். இதைத்தொடர்ந்து, கும்பாபிஷேக நிகழ்ச்சியிலும் அவர்கள் கலந்துகொண்டனர்.
தவிர, கும்பாபிஷேகத்துக்கு வருகை தந்தோரை வரவேற்று ஜமாத் சார்பில் பேனர் வைக்கப்பட்டதுடன், வந்திருந்தோருக்கு குடிநீர் பாட்டில்களும் விநியோகிக்கப்பட்டன. நல்லிணக்கத்தோடு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT