Last Updated : 17 Jun, 2014 09:32 AM

 

Published : 17 Jun 2014 09:32 AM
Last Updated : 17 Jun 2014 09:32 AM

வீட்டில் வெப்கேமரா, கையில் ஸ்மார்ட்போன் பெண்கள் தனியே இருந்தாலும் பயமில்லை: ஆபத்து வராமல் காக்கும் தொழில்நுட்பத் தோழன்

சென்னையில் தனியாக இருக்கும் பெண்களை நோட்ட மிட்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகிவிட்டது.

சென்னையின் மக்கள்தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் ஃபாஸ்ட் ஃபுட் கடை வரை ஏராளமான தொழில்கள் பெருகி, வேலை வாய்ப்பு வசதிகள் அதிகரித்ததன் விளைவு.. சென்னையை நோக்கி மக்கள் குடிபெயர்வு அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப் படி சென்னை மாநகர எல்லைக்குள் மட்டுமே 47 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். சென்னை பெருநகர (Metro area) எல்லைக்குட்பட்டு 90 லட்சம் பேர் வசிப்பதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

பாதுகாப்பு கேள்விக்குறி

இப்படி வேலைவாய்ப்பு வசதிகளும் வாழ்க்கைத்தரமும் உயர்ந்து வரும் சென்னையில், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களின் பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. சென்னையில் 19.32% அளவுக்கு பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடப்பதாக 2012-ம் ஆண்டு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது வீட்டில் தனியாக இருக்கும் குடும்ப பெண்களும், வயதான பெண்களுமே.

சில நாட்களுக்கு முன்பு சென்னை எழும்பூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். நொளம்பூரைச் சேர்ந்த மருத்துவர் மல்லிகா, விழுப்புரம் அருகே கொல்லப் பட்டார். மேலும் நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரேகா என்னும் பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்த சாம்சன் என்னும் நபர், வீட்டில் தனியாக இருந்த போது துண்டு துண்டாக வெட்டி போரூர் ஏரியில் வீசினார்.

இது மாதிரியான கோர சம்பவங்கள் தொடர்ந்து நடை பெறுவது சென்னையில் உள்ள குடும்ப பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாதுகாப்புக்கு வெப்கேமரா

கணவன் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், தங்களது பாதுகாப் புக்காக பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை செய்துகொள்ளலாம். குறிப்பாக வெப்கேமராக்களை வீட்டில் பொருத்துவதன் மூலம் வீடுகளில் தனியாக உள்ள பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச்சம்பவங்களை எளிதில் தடுக்கலாம்.

வீட்டு முகப்பில் வெப்கேமரா பொருத்தினால், வீட்டுக்கு யார் வருகிறார்கள் போகிறார்கள் என்ற விவரங்கள் அதில் பதிவாகும். பதிவாவது மட்டுமன்றி இதனை நேரடியாக ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளில் பார்க்கும் வசதியும் உள்ளது.

ஸ்மார்ட்போனில் பார்க்கலாம்

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் அப்ளிகேஷன்கள் மூலம் வெப் கேமரா இணைப்பை பெற முடியும். இதற்காக பிளேஸ்டோர், ஆப்ஸ்டோர் போன்ற இணைய சந்தைகளில் ஏகப்பட்ட இலவச ஆப்ஸ் உள்ளன. உதாரணத்துக்கு, மை வெப்கேம் என்னும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொண்டு அதன்பின்னர், வீட்டில் உள்ள வெப்கேமராவின் இணையநெறி முகவரி (Internet Protocol Address), தல எண் (Port Number) ஆகியவற்றை கொடுத்துவிட்டால் வெப் கேமராவில் பதிவாகும் காட்சிகளை, இருக்கும் இடத்தில் இருந்தே ஸ்மார்ட்போனில் நேரடி யாக பார்க்கலாம்.

இதுமட்டுமன்றி கேமராவுக் கான இணைய முகவரியை சில கண்காணிப்பு இணையதளங் களில் பதிவு செய்தால், எந்த நேரத்திலும் எந்த நாட்டிலும் இருந்துகொண்டு சம்பந்தப்பட்ட வெப் கேமரா காட்சியை நேரடி யாக பார்க்கவும் அந்த காட்சி களை அப்படியே சேமித்து வைத்துக் கொள்ளவும் வசதிகள் உள்ளன.

ரூ.2 ஆயிரம் முதல்..

குறிப்பிட்ட நபர் மட்டுமன்றி சம்பந்தப்பட்ட வீட்டை சேர்ந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள்கூட, பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் மூலம் இந்த காட்சிகளை பார்க்கலாம்.

இந்த வகை வெப்கேமராக்கள் சென்னையில் ரிச்சி தெரு, பர்மா பஜார் போன்ற இடங்களில் ரூ.2 ஆயிரம் முதல் கிடைக்கின்றன. காட்சிகளை எச்.டி. எனப்படும் துல்லியமான வீடியோவாக பதிவு செய்யும் கேமராக்கள் ரூ.10 ஆயிரம் முதல் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x