Published : 22 Feb 2022 06:27 AM
Last Updated : 22 Feb 2022 06:27 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் 396 வார்டுகளுக்கு நடந்த தேர்தல்; நகர்ப்புற உள்ளாட்சிகளை ஆளப்போவது யார்? - மக்கள் தீர்ப்பு இன்று பிற்பகலுக்குள் தெரியும்

வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் செல்வதற்கு தனிப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. படங்கள்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி/ கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் 396 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்த நிலையில், மக்கள் தீர்ப்பு யாருக்கு சாதகம் என்பது இன்று பிற்பகலுக்குள் தெரியவரும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 9 வாக்குஎண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையம் வஉசி அரசு பொறியியல்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையம்கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம் நகராட்சிகள், ஆறுமுகநேரி, கானம், ஆத்தூர்பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் வீரபாண்டியன்பட்டினம் செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை பேரூராட்சிகளுக்கு ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளியிலும், நாசரேத், உடன்குடி, சாத்தான்குளம் பேரூராட்சிகளுக்கு பிரகாசபுரம் செயின்ட் மேரீஸ் நடுநிலைப்பள்ளியிலும், ஏரல்,பெருங்குளம், சாயர்புரம், வைகுண்டம் பேரூராட்சிகளுக்கு சாயர்புரம் போப் கல்லூரியிலும், எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர் பேரூராட்சிகளுக்கு எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கயத்தாறு பேரூராட்சிக்கு கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கழுகுமலை பேரூராட்சிக்கு கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இன்று காலை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு, அவைகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஒவ்வொரு வார்டிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மேஜைகள் போடப்பட்டு, ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தூத்துக்குடி வஉசி அரசுபொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் தி.சாரு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் ஆட்சியர் கூறும்போது, “வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் முதல் தளம் மற்றும் 2-வது தளத்தில் இரண்டு வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 1 முதல் 30 வார்டுகளுக்கும், 2-வது தளத்தில் 31 முதல் 60 வார்டுகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இரு அறைகளிலும் தலா 15 மேஜைகள் போடப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களில் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள், பத்திரிகையாளர்கள் வருவதற்கு தனித்தனி பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அமருவதற்கு காத்திருக்கும் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில்12 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் 1 முதல் 12-வது வார்டு வரையும், அதன் பின்னர் 13 முதல் 24, தொடர்ந்து 25 முதல் 36-வது வார்டுகள் என, வாக்குகள் 3 சுற்று எண்ணப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள 396 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இவற்றில் வெற்றிபெறப்போவது யார்?, மேயர் உள்ளிட்டதலைவர் பதவியை கைப்பற்றப்போகும் கட்சி எது? என்பது இன்று பிற்பகலுக்குள் தெரிந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x