Last Updated : 21 Feb, 2022 07:03 PM

 

Published : 21 Feb 2022 07:03 PM
Last Updated : 21 Feb 2022 07:03 PM

சட்டவிரோதச் செயல்களில் தீட்சிதர்கள்... சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கட்டுபாட்டில் கொண்டுவர வேண்டும்: முத்தரசன் பேட்டி

சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

கடலூர்: "சிதம்பரம் நடராஜர் கோயிலைத் தனிச்சட்டம் இயற்றி அரசு கட்டுபாட்டில் கொண்டுவர வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று (பிப்.21) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குத் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் உலக நாடுகளிலிருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இப்படி புகழ் பெற்ற இக்கோயிலுக்கு வழிபட வரும் பக்தர்களுக்குக் கொலை மிரட்டல், பெண் பக்தர்கள் மீது தாக்குதல், சாதிய தீண்டாமை உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் தீட்சிதர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இது கண்டிக்கதக்கது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தாலும் அவர்களைக் கைது செய்வதில்லை. எனவே, சம்பந்தபட்ட தீட்சிதர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். சங்கராச்சாரியாரை கைது செய்த காவல்துறை தீட்சிதரைக் கைது செய்ய ஏன் தயங்குகிறது? இதற்கு யார் தடையாக உள்ளார்கள்? தமிழக முதல்வர் அதற்குத் தடையாக இருக்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு சிறு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல்துறை வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும்.

நடராஜர் கோயில் சமூக விரோதிகள் மற்றும் சட்ட விரோதிகளின் புகலிடமாக மாறாமல் தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்றி அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். மேலும் சிற்றம்பல மேடையில் அனைத்து பக்தர்களும் இலவசமாகத் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடி வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் தீட்சதர்களுக்கு ஒருதலைப்பட்சமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை வைத்துக் கொண்டு அவர்கள் கோயிலில் ஆட்சி நடத்த முடியாது. ஊழியர்களாகத்தான் செயல்பட முடியும். கோயிலில் இவர்கள் காசுக்காகத்தான் சேவை செய்கிறார்கள். யாராவது ரூ.1 கோடி கொடுத்தால் நடராஜர் சிலையைத் தூக்கி கொடுத்து விடுவார்கள். இதுகுறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தபடும், சட்டமன்றத்திலும் பேசப்படும். வழக்குப்பதிவு செய்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் தீட்சிதர்களைக் கைது செய்யாததை கண்டித்து வரும் 26-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் சிதம்பரம் கோயில் முற்றுகை போராட்டம் நடைபெறும்" என்றார்.

மாநில நிர்வாகக் குழு மணிவாசகம், மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சேகர், மாவட்ட துணை செயலாளர் குளோப், சிதம்பரம் நகர செயலாளர் தமீம்முன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x